வெள்ளி, மார்ச் 23, 2012

ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்கிறோம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!


புதுடெல்லி:இயற்கைக்கு முரணான ஓரினச் சேர்க்கையை குற்றகரமான செயல் அல்ல என்று தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அங்கீகரிப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஓரினச்சேர்க்கை சட்டத்தை மீறிய செயல் அல்ல என்றும் மத்திய அரசுக்காக ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ.வாஹன்வதி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஓரினச்சேர்க்கை குற்றகரமானது அல்ல என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பில் வீழ்ச்சிகள் இல்லை என்றும், தீர்ப்பை மத்திய அரசு அங்கீகரிப்பதாகவும் அட்டர்னி ஜெனரல் கூறினார். ஓரினச்சேர்க்கையை எதிர்த்து உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் குறித்து இவ்வழக்கை விசாரித்துவரும் நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மத்திய அரசின் கருத்தை கேட்டது.
ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுவது ஓரினச் சேர்க்கைக்காரர்களின் அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான உரிமையை மறுப்பதாக அமையும் என்று வாஹன்வதி பதில் அளித்தார்.
முன்னர் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் பி.பி.மல்ஹோத்ரா ஓரினச்சேர்க்கையை எதிர்த்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ததற்கு காரணம், சட்ட அமைச்சகத்திற்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் இடையே தகவல் தொடர்பில் ஏற்பட்ட வீழ்ச்சியாகும் என்று வாஹன்வதி விளக்கம் அளித்தார். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஓரினச்சேர்க்கைக்கு சட்ட அந்தஸ்து வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில் மத்திய அரசு இயற்கைக்கு முரணான மனித குலத்திற்கே எதிரான ஓரினச்சேர்க்கை சட்டத்தை மீறிய செயல் அல்ல என்ற பொறுப்பற்ற கருத்தை பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளது. இவ்வழக்கில் முன்பு உள்துறை அமைச்சகமும், சுகாதாரத்துறை அமைச்சகமும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருந்தன.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்தியாவில் 25 இலட்சம் பேர் ஓரின சேர்க்கை பழக்கம் உள்ளவர்கள் என்றும் அவர்களில் 7 சதவீதம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் 4 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வரும் அபாயம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட புள்ளிவிபர அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக