வியாழன், மார்ச் 29, 2012

வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் ரூ.50,000 அபராதம். சட்டதிருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு !

கொசுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் படி வீடுகளை சுத்தமாக வைத்திருக்காவிடில் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் சுகாதார சீர்கேடுகள் தான்.  மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் கொசுக்கள் மூலமே பரவுகின்றன. குப்பைகள், சாக்கடை நீர் போன்றவற்றில் இருந்து தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. எனவே
சுத்தத்தை பராமரித்தால் கொசுக்களின் இனப் பெருக்கத்தை தடுத்து அதன் மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

இதற்காக 1939-ல் தமிழக பொதுசுகாதார சட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ராஜன் பரிந்துரையில், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த சட்டத்தை இயற்றியது. அதன்படி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு 50 பைசா முதல் 5 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால், சுதந்திரத்துக்கு பிறகு அமைந்த அரசாங்கங்கள் இந்த சட்டத்தில் உள்ள ஷரத்துக்களை முறையாக அமல் படுத்தவில்லை. டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் தலைதூக்க தொடங்கியதும், கடந்த 2009-ல் பொது சுகாதார சட்டத்தின் பக்கம் அரசின் கவனம் திரும்பியது.

இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது பற்றி பரிந்துரை செய்ய, கூடுதல் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் இளங்கோ தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு ஆய்வு செய்து, அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை செய்தது. சுகாதார துறை செயலாளர் சுப்புராஜிடம் பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் முக்கிய பரிந்துரை, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்பதாகும்.

அந்த அறிக்கை 3 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. உயிரூட்டல் தற்போது அந்த சட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுக்க, அ.தி.மு.க. அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சட்டத்தில் இந்த காலத்துக்கு பொருந்தும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ள, ஆலோசனை நடத்தப்படுகிறது. சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்கும் வகையில், வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். சாக்கடை நீரை தேக்கி வைக்க கூடாது. கழிவுப் பொருள்களை கண்ட இடங்களில் கொட்ட கூடாது.

குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை தெருவில் வீசக் கூடாது. அதே போல தொழிற்சாலைகள், மருத்துவ மனைகள் மற்றும் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் போன்றவைகளால் கழிவுகளை பொது இடங்களில் குவிக்க கூடாது. குடிநீர் ஆதாரப்பகுதிகளில் கழிவு நீரை வெளியேற்றக் கூடாது. அனைத்து தரப்பு சுகாதாரத்தை பேண வேண்டும் என்று வலியுறுத்தும் திருத்தங்கள் சட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. 


வீடுகளை சுத்தமாக பராமரிக்காதவர்களுக்கு அதிக பட்சமாக ரூ.50 ஆயிரமும், தொழிற்சாலைகளுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் அபராதம் விதிக்க, சட்டத்தில் வழிவகை செய்யப்பட உள்ளது. பொது சுகாதார சட்டத்தை கடுமையாக அமல்படுத்தினால் 80 முதல் 90 சதவிகிதம் சுகாதார சீர்கேட்டை சரி செய்து விடலாம் என்று சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்தன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக