சனி, மார்ச் 31, 2012

கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.வை மீட்க முயற்சி:மாவோயிஸ்டுகளுக்கு முதல்-மந்திரி அழைப்பு

 ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ. ஜினா ஹிகாகாவை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு மாவோயிஸ்டுகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். அவரை விடுவிக்க மாவோயிஸ்டுகள் 3 நிபந்தனைகளை அறிவித்தனர். 

போலி என் கவுண்டர் செய்த போலீஸ்காரர்களை தண்டிக்க வேண்டும், மாவோயிஸ்டு தலைவர்களை ஜெயிலில் இருந்து விடுவிக்க வேண்டும், எம்.எல்.ஏ. விடுதலை கோரி கடையடைப்பு நடத்தக் கூடாது என்பது மாவோயிஸ்டுகளின் நிபந்தனைகளாகும். 

மத்திய-மாநில அரசுகள், இந்த நிபந்தனைகள் பற்றி ஆலோசித்த போதிலும் எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் எடுக்கவில்லை. இதனால் மாவோயிஸ்டுகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. 

இந்த நிலையில் ஒடிசா முதல்-மந்திரி நவீன்பட் நாயக், மாவோயிஸ்டு ஆதரவு அமைப்புகளுக்கு புதிய அழைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கடத்தப்பட்ட எம்.எல்.ஏ. மற்றும் இத்தாலி சுற்றுலா பயணியை மீட்க பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அவர் அந்த அழைப்பில் கோரிக்கை விடுத்துள்ளார். 

நவீன் பட்நாயக்கின் அழைப்பை ஏற்று சசி முலியா ஆதிவாசி சங்கம் பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது. இவர்கள் மூலம் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

ஆதிவாசி சங்கத்தைச் சேர்ந்தவர்களில் யார், யாரை பேச்சுவார்த்தைக்காக காட்டுக்குள் அனுப்புவது என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் உதவியுடன் எம்.எல்.ஏ.வை பத்திரமாக மீட்க முடியும் என்று பிஜு ஜனதா தளம் தலைவர்கள் நம்புகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக