அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு முகவர்நிலையம் உலகிலேயே மிகப் பிரமாண்டமான உளவு மையம் ஒன்றை தற்போது நிறுவி வருகின்றது எனும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவினுள்ளும் உலகின் ஏனைய நாடுகளிலும் மின்னூடகங்கள் வழியே நடைபெறும் சகலவிதமான தொலைத் தொடர்பாடல்களும் சேகரிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவதே இதன்
தலையாய பணியாய் இருக்கும் என மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மாத இதழான வயர்ட் இதுபற்றி மேலும் தெரிவிக்கையில், "அமெரிக்காவின் ப்ளஃப்டேல் பிராந்தியத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றிலே இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த உளவு மையம் நிறுவப்பட்டுவருகிறது; இங்கு மிகப் பிரமாண்டமான அளவில் மின்னூடகத் தரவுகளைச் சேகரித்து வைக்கக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளது.
"தொலைபேசிச் செய்திகள், தனிப்பட்ட மின் மடல்கள், கையடக்கத் தொலைபேசியூடான குறுஞ்செய்திகள் என உலகின் சகலவிதமான நவீன மின்னியல் ஊடகத் தகவல் தொடர்பாடல்களும் சேமிக்கப்பட்டு, குறியீட்டு மொழியில் இருந்து மொழியாக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவது இந்த உளவு மையத்தின் பிரதான பணியாக இருக்கும் என்பதோடு, உலகின் அதி நவீனமானதும் நுணுக்கமானதுமான உளவுச் சேவையாக இது அமையும்" எனவும் மேற்படி இதழ் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி உளவு மையத்தின் தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் வருடாந்தம் 65 மெகாவாட்ஸ் மின்சாரம் பயன்படுத்தப்படும்.
"இந்த அதி நவீன உளவு மையத்தின் ஊடாக சர்வதேச ரீதியில் நடைபெறும் இணையக் குற்றச்செயல்களைக் கண்டுபிடித்தல், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் என்பன தமது முக்கியமான நோக்கங்களாகும்" என அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் குறிப்பிட்டுள்ள போதிலும், "இது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துக்கு எதிரானதாகும்; குறிப்பாக, கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பவற்றின் மீதான மிக மோசமான அத்துமீறலாகும்" என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக