வெள்ளி, மார்ச் 30, 2012

சேது கால்வாய்:சதிகாரர்களுக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுக்க கூடாது – தி.மு.க எம்.பிக்கள் கோரிக்கை!


புதுடெல்லி:தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் சேதுகால்வாய் திட்டத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சிலரின் சதிக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுத்தால் அது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராக அமைந்துவிடும் என்று தி.மு.க எம்.பிக்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

சேதுக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில், “ராமர் பாலம்’ இருப்பதாக ஹிந்துக்கள்  நம்புவதால் அதற்கு மதிப்பளித்து அப்பகுதியை தேசிய புராதனச் சின்னமாக அறிவிக்க  வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், மக்களவை வியாழக்கிழமை நண்பகலில் ஒத்தி வைக்கப்பட்டதும், நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக எம்.பி.கள் அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் சந்தித்து மனு அளித்தனர். அதன் விவரம்:
“இந்தியா-இலங்கை இடையே உள்ள பாக் நீரிணையின் குறுக்கே கப்பல் எளிதாகச் சென்று வருவதற்காக சேது கால்வாய்த் திட்டம் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது மூன்று ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு மட்டுமே அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் சுய ஆதாயத்துக்காக சிலர் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து பிரச்னையைத் திசை திருப்பி வருகின்றனர். பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் இந்தத் திட்டத்தைக் குலைக்க ஒரு சிலர் திட்டமிடுகின்றனர்.
அவர்களின் சதிக்கு சாதகமாக மத்திய அரசு முடிவு எடுத்தால் அது ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராக அமைந்துவிடும்.
மதிப்பு மிக்க சேது கால்வாய்த் திட்டத்துக்காக இவ்வளவு காலமும் அரசு செலவு செய்த மக்களின் பணம் விரயமாகும். இதைக் கவனத்தில் கொண்டு, தற்போதைய நிலையில் அந்தத்  திட்டத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல், அது தொடர்பான நீதிமன்ற நடைமுறைகளைத் துரிதப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்று திமுக எம்.பி.க்கள் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதே கோரிக்கை அடங்கிய மனுவை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கொடுப்பதற்காக  திமுக எம்.பி.க்கள் சென்றனர். ஆனால், டெல்லியில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டுள்ளதால், நாடாளுமன்றத்துக்கு அவர் வியாழக்கிழமை வரவில்லை. இதையடுத்து அந்த மனுவை பிரதமர் அலுவலகத்துக்கான இணை அமைச்சர் நாராயணசாமியிடம் டி.ஆர். பாலு அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக