செவ்வாய், மார்ச் 27, 2012

ஆபாசப் படங்கள்... அல்லாடும் பெண்கள்.. பெண்களை நோக்கி திரும்பியுள்ள டிஜிட்டல் உலகத்தின் கழுகு. கட்டாயம் பார்க்க வேண்டிய கட்டுரை.

 சராசரி வாரத்திற்கு நான்கு செய்திகளாவது இப்படி வந்து விடுகின்றன. "பெண்ணை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய வாலிபர் கைது" என்று. இந்த அயோக்கியத்தனத்தை படித்த, படிக்காத என்று அனைவரும் பாகுபாடின்றி செய்கின்றனர்.
"கையில் கைபேசி இருந்தால் போதும்". ஊடகங்களே இந்த காரியங்களை செய்யும்போது - சாமானியன் செய்ய மாட்டானா? இதில் சிக்கும் பெண்களுக்கும் - படித்த, படிக்காத என்கிற வேறுபாடில்லை. "படிக்காததால் ஏமாற்றப்படுகின்றனர்" என்பதெல்லாம் இனி வருங்காலங்களுக்கு பொறுந்தாதோ.

ஏமாறுவது என்று முடிவு செய்தப்பின் - படிப்பெல்லாம் பெரிதில்லை. படித்தவர்களும் ஏமாறும் கதை, அதை தான் சொல்கிறது - முக்கியமாய் ஆபாச படமெடுத்து மிரட்டலில் சிக்கும் பெண்கள் விஷயத்தில். எல்லோரும் நிறைய படித்தவர்கள் தாம். இதில் சில - சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தெரியாமல் படமெடுத்தவையாக இருக்கலாம்.
பெரும்பாலானவை காதலிக்கின்றவனால் காதலிக்கும் போது எடுக்கப்பட்டு - பின்னாளில் அவை பணப்பறிப்புக்கான ஆயுதமாக ஆகிறது. இணையத்தில் வெளியிட்டுவேன் என்கிற மிரட்டலுக்காக பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நேரத்தில் மகிழ்ச்சியாக இருந்த விஷயமே - மீள முடியாத சோகத்திற்கு தள்ளிவிடுகிறது. இந்த காதல் வலையில் சிக்கும் பெண்கள் யார் என்று பார்த்தால் - அவர்களில் பெரும்பாலோர் முதல் திருமணம் முறிவடைந்தவர்களாக, நல்ல மனிதர் கிடைத்தால் தங்களை ஒப்படைத்துவிட தயாராக இருக்கும் பலவீனமான மனம் படைத்த பெண்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு சோகம். புலியிடம் (முதல் கணவனிடம்) தப்பி - சிங்கத்திடம் (இரண்டாவது உறவிடம்) பலியாகும் மானின் கதை தான்.
தெரியாமல் படமெடுத்து - உடை மாற்றும் போது, குளிக்கும் போது - படமெடுக்கப்படுகிறோம் என்று தெரியாமல், பின்னாளில் மிரட்டலில் சிக்கும் பெண்களை அப்பாவிகள் என்று சொல்லலாம்.
ஆனால் காதலனால் படமெடுக்கப்படும் சூழலில் பெண்கள் அதை எந்த அளவு அறிவுடன் ஏற்று கொள்கிறார்கள். தினசரிகளில் தினசரி வருகிற செய்தி. "ஆபாச படமெடுத்து பெண் மிரட்டல்" எத்தனை படித்தும், எத்தனை வாசித்தும் இருந்தால் என்ன. "நான் ஏமாறுவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது" என்கிற ரீதியில் அவர்கள் ஏமாற தயாராக இருந்தால் நாமென்ன செய்ய முடியும்.
இதில் வீடியோ சாட் டின் மற்றும் Skype போது - காதலன் விரும்புகிறான் என்று தன்னை ஆபாசமாக காட்டுதல். இன்றைய தினசரியில் மட்டும் இரண்டு செய்திகள் இப்படி வந்துள்ளன.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த பொறியாளர் ஒருவர், இலங்கையை சேர்ந்த - இப்போது இத்தாலியில் வசிக்கின்ற, திருமணமாகி மணமுறிவு பெற்ற பெண்ணை சாட்டின் போது ஆபாசமாய் நிற்க வைத்து - அதை புகைப்படம் எடுத்து தற்போது மிரட்டியும், பணத்தையும் பறித்து கொண்டு ஓடியதன் விளைவாக இப்போது சிறையில்.
மற்றொன்று - டியூசன் படிக்க வந்த பெண்ணை காதல் வயப்படுத்தி - அதை புகைப்படமெடுத்து - அந்த பெண்ணை தம் நண்பர்களுக்கெல்லாம்... என்று ஒரு கல்லூரி மாணவியின் படிக்க வேண்டிய காலக்கட்டம் - மிகப் பெரிய அசிங்கத்தை சுமந்து கொண்டிருக்கிறது.
அவர் எதிர்காலம்... சில வருஷங்கள் முன் நடந்த ஒரு சம்பவம். நண்பர் சொன்னது. அவர் மனைவி பணிபுரியும் இணைய தள மையத்தில் - ஒரு பெண் மூடிய கேபினுக்குள், சாட் செய்தவாறு தன் ஆடைகளை களைந்திருக்கிறார். யதோற்சையாக அதை கவனித்த பணியாளர்கள் - அந்த பெண்ணை வெளியே அனுப்பிவிட்டார்கள். அது முதல் கேபினை மூட அனுமதிப்பதில்லை.
எந்த நம்பிக்கையில் இந்த பெண்கள் - தொலைதூரத்தில் இருக்கும் காதலனுக்காக இந்த அநாகரீகமான காரியம் செய்ய துணிகிறார்கள். இந்த விஷயத்தில் யாரை தவறு சொல்வது. ஆண்களையா? பெண்களையா? ஆண்களை மட்டும் தவறு சொல்வது என்பது ஒரு வித தப்பிக்கும் மனப்பான்மை. "உலகம் - முக்கியமாய் ஆண்களின் வக்ர உலகம் பெண்களை எப்படி ஏமாற்றுவது" என்கிற ரீதியில் தான் சிந்தித்து கொண்டிருக்கிறது.
பெண்களின் மூளை
"அதிலிருந்து எப்படி தப்பிப்பது" என்று இருக்க வேண்டுமே ஒழிய, "சிக்கி சின்னாபின்னமாகி விடக்கூடாது".
"ஆபாசப்படம் பார்ப்போரே - ஒரு நாள் ஆபாசப் படங்களாய்" மாறும் அபாயம் உள்ளது. "எதுவும் தப்பில்லை" என்கிற சூழலுக்கு தள்ளப்பட்ட பிறகு - பெண்கள் ஒரு சம்பவத்தால் தொடர்ந்து நிகழ போகும் அனர்த்தங்களை தொலை நோக்கோடு சிந்திப்பதில்லை. ஆபாசம் நிறைந்த உலகில் வாழ்கிறோம். வழிபாட்டுத்தலம் (சாமியார்களும், பாதிரியார்களும்), சட்டசபை வளாகம், கவர்னர் மாளிகை (உபயம் : திவாரி), கல்விக்கூடங்கள் என்று காமூகர்கள் எங்கும் நிரம்பி வழிகிறார்கள்.
பெண்கள் தங்களை தாங்கள் தான் காத்து கொள்ளவேண்டும். எல்லாம் முடிந்தப்பின் அழுதவாறு - தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்று பேசினால் மட்டும் போதுமா? காட்சி ஊடகங்கள் என்ன யோக்கியமா? உங்கள் கண்ணீரை துடைக்கிறேன் பேர்வழி என்று- பரபரப்பான தொடராக்கி பணம் பார்க்கின்றன. காவல்துறை வசம் சைபர் கிரைம் குற்றங்கள் நிரம்பி வழிகின்றன.
"தெரியாமல் நடக்கின்ற குற்றங்களை ஆர்வமுடன் கவனிக்கும் காவல்துறை - தெரிந்தே சீரழியும் குற்றங்களை வெறுப்பாக தான் பார்ப்பர்" ஒவ்வொரு தனி மனிதனின் தவறும் -காவல்துறைக்கு அதீத பணிச்சுமையை கொடுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு முறை இத்தகைய செய்தியை வாசித்து கொண்டு இருந்தபோது, "எல்லாம் கொழுப்பு" என்றார்பக்கத்தில் இருந்தவர். . நாம் தொலை நோக்கின்மை என்றதை அவர் அப்படி சொன்னார்.
சற்றே அநாகரீகமான வார்த்தை தான். சில தவறுகள், சில அசம்பாவிதங்கள் - நம் மொத்த வாழ்க்கையையும் அசிங்கமாய், கேலிக்குரியதாய் ஆக்கி விடும். உங்களின் அறிவு உங்களை காப்பாற்றவில்லை என்றால் - உங்களை யாராலும் காப்பாற்ற இயலாது. உஷாராய் இருங்கள் பெண்களே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக