ஞாயிறு, மார்ச் 25, 2012

ஃபஸல் கொலைவழக்கு:வழக்கை சீர்குலைக்க க்ரைம் ப்ராஞ்ச் முயற்சி – சி.பி.ஐ


கண்ணூர்:கேரள மாநிலம் தலசேரியில் தேசிய ஜனநாயக முன்னணியின்(என்.டி.எஃப்) உறுப்பினர் பி.கே.முஹம்மது ஃபஸலை வெட்டிக் கொலைச் செய்த வழக்கில் விசாரணையை சீர்குலைக்க போலீசும், க்ரைம் ப்ராஞ்சும் முயன்றதாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
இடதுசாரி கூட்டணி ஆட்சியில் நடந்த இந்த அநியாய படுகொலையில் குற்றவாளிகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குண்டர்களை பாதுகாக்க அரசு மட்டத்தில் முயற்சிகள் நடந்துள்ளது என்பது சி.பி.ஐக்கு தெரியவந்துள்ளது.
இவ்வழக்கில் முக்கிய சம்பவங்கள் நடந்தபொழுது அன்றைய உள்துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏவுமான கொடியேறி பாலகிருஷ்ணன் தலச்சேரியில் தங்கியிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
வழக்கை திசை திருப்பவும், சி.பி.ஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அரசு இயந்திரங்களை உபயோகித்து சி.பி.எம் நடத்திய முயற்சிகளையும் சி.பி.ஐ கவனமாக பரிசீலித்து வருகிறது.
2006-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி ஈதுல் ஃபிதர் என்றழைக்கப்படும் ரமலான் பெருநாள் தினத்திற்கு முந்தைய தினம் தேஜஸ் நாளிதழின் ஏஜண்டான முஹம்மது ஃபஸல் லிபர்டி குவார்ட்டர்ஸிற்கு முன்பு வைத்து வெட்டப்பட்டு படுகொலைச் செய்யப்பட்டார். பைக்குகளில் வந்த வெறிப்பிடித்த கயவர்கள் கும்பல் இந்த அராஜகத்தை அரங்கேற்றிவிட்டு சென்றனர்.
இவ்வழக்கில் தலச்சேரியில் வட்டார ஆய்வாளராக இருந்த பி.சுகுமாரனும், டி.எஸ்.பி கெ.எ.பிலிப்பும் இணைந்து எஃப்.ஐ.ஆரை தயாரித்தனர். ஆனால், ஒரு கொலை நடந்தால் அதனை டாக்டர் உறுதிச் செய்யவேண்டும். ஆனால், அதனை போலீஸ் செய்யவில்லை என்று சி.பி.ஐ கண்டுபிடித்துள்ளது.
அதுமட்டுமல்ல, ஃபஸலின் சைக்கிளும், செருப்பும் இதரப் பொருட்களும் உடனடியாக அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட்டன. ஆனால், அங்கு வேறு என்ன பொருட்கள் இருந்தன என்பது தெளிவாக பதிவுச் செய்யப்படவில்லை. மாலையில் டி.சி.ஆர்.பி டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் விசாரணை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவர்தாம் ஃபஸலின் கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அல்ல சி.பி.எம் என்பதை கண்டுபிடித்தார். ஆனால் வட்டார ஆய்வாளரை காப்பாற்ற டி.எஸ்.பி முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஃபஸல் கொலைச் செய்யப்பட்ட இடத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை வட்டார ஆய்வாளர் தயார் செய்ததாக டி.எஸ்.பி ஆவணம் தயாரித்தார் என்று கருதப்படுகிறது. மேலும், ஃபஸல் கொலைச் செய்யப்பட்ட இடத்தில் இருந்தும், அருகிலுள்ள லிபர்டி குவார்ட்டர்ஸில் இருந்தும் நேரில் கண்டவர்களிடமும் வாக்குமூலம் முறையாக பதிவுச் செய்யப்படவில்லை. நேரில் கண்டவர்களை கொலை நடந்து 3-வது நாள் சில சி.பி.எம் குண்டர்கள் மிரட்டியதோடு, வாக்குமூலம் அளிக்க கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர். இதனை கண்டுபிடிக்கவும் போலீசாரால் இயலவில்லை. தீவிரமாக கண்காணித்திருந்தால் குற்றவாளிகளை குறித்து அன்றைய தினமே அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம் என்று சி.பி.ஐ கருதுகிறது.
ஆனால், விசாரணை நடந்துகொண்டிருக்கையில் எவரும் கோரிக்கை விடுக்கப்படாத சூழலில் வழக்கை விசாரித்து வந்த டி.சி.ஆர்.பி டி.எஸ்.பி ராதாகிருஷ்ணனை மாற்றிவிட்டு வழக்கின் விசாரணை க்ரைம் பிராஞ்சிடம் ஒப்படைத்து மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டியின் விசாரணையில் டி.எஸ்.பி டி.கே.ராஜ்மோகனின் தலைமையிலான குழு சி.பி.எம் உறுப்பினர்களான சுனில்குமார், விஜேஷ், எம்.கே.ஜிதேஷ் ஆகியோரை கைது செய்தது. இதன் பின்னர் இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்டை வெளிக்கொணர ஃபஸலின் மனைவி  உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதனைத் தொடர்ந்து ஏராளமான ஆதாரங்களை அழிக்க போலீசாருக்கு நிர்பந்தம் அளிக்கப்பட்டது என்பதை சி.பி.ஐ கண்டுபிடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக