வியாழன், மார்ச் 22, 2012

"எங்களைப் பற்றி விமர்சனம் செய்தால்... ஜாக்கிரதை': அமெரிக்காவிற்கு வடகொரியா எச்சரிக்கை


வாஷிங்டன்: தென்கொரியத் தலைநகர் சியோலில் அடுத்த வாரம் நடக்க உள்ள சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் பற்றி ஏதாவது விமர்சனம் செய்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என வடகொரியா எச்சரித்துள்ளது.
சியோலில் அடுத்த வாரம் 26, 27ம் தேதிகளில், சர்வதேச அணுசக்தி பாதுகாப்பு மாநாடு நடக்க உள்ளது. இதில், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகள், சர்வதேச அமைப்புகள் கலந்து கொள்கின்றன. "இந்த மாநாட்டில், அணு ஆயுதப் பரவல் குறித்தும், பயங்கரவாதிகளிடம் இருந்து அணு ஆயுதங்களைப் பாதுகாப்பது குறித்தும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்துவார். குறிப்பாக. ஈரான் மற்றும் வடகொரிய நாடுகள் அணு ஆயுதங்களை மேம்படுத்துவதைத் தடை செய்வதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்வார்' என, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோடஸ் தெரிவித்துள்ளார். அணு ஆயுதப் பரவலை வலியுறுத்தும் விதத்தில், ஆஸ்திரேலிய பார்லிமென்டில் அந்நாட்டு அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதன்படி. அணு ஆயுத நாடுகள் தங்கள் அணு ஆயுத இருப்பை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த முடிவுக்கு, சர்வதேச அணுசக்தி பரவல் தடைச் சட்டத்திற்கு வெளியே உள்ள நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். இதன் மூலம் அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்க வழி ஏற்படும். இத்தீர்மான விஷயத்தில், ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டும், எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபோட்டும் கைகோர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ ஆகியோரை சந்தித்துப் பேச ஒபாமா திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், சியோல் மாநாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வடகொரியா, "அம்மாநாட்டில், வடகொரியாவின் அணு ஆயுதங்கள் குறித்து ஏதாவது விமர்சனம் செய்தால், அதுவே போருக்கான அழைப்பாகக் கொள்ளப்படும். அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதக் குறைப்பு நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும்' என எச்சரித்துள்ளது. தனது அணு ஆயுதக் குறைப்பு குறித்து பேச, ஆறு நாடுகள் கூட்டத்திற்கு வடகொரியா ஏற்கனவே சம்மதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் போர்க் கப்பல்கள்: இந்நிலையில், வடகொரியாவில் இருந்து தனது கடல் மற்றும் வான்வெளிக்குள் எந்த ராக்கெட்டாவது நுழையுமானால், அதைச் சுட்டுத் தள்ளும்படி ஜப்பான் உத்தரவிட்டுள்ளது. இதற்காக தென்சீனக் கடல் பகுதியில், ஜப்பான் தனது போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. இக் கப்பலில், தரையில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் பி.ஏ.சி., - 3 பேட்ரியாட் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக