ஆப்கானிஸ்தானில் பன்னாட்டு நேட்டோ படைகள் முகாமிட்டு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றன. சமீப காலமாக அவர்களது நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும், போலீசாருக்கும் பிடிக்கவில்லை. எனவே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.நேட்டோ படை வீரர்களை சுட்டுக்கொன்று வருகின்றனர்.
இந்த நிலையில், பக்திகா மாகாணத்தில் உள்ள யாயா கில் இடத்தில் போலீசார் முகாமிட்டுள்ளனர். அங்கு நேட்டோ படை வீரர்களும் இடம் பெற்று இருந்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு விருந்து நடந்தது. அதில் மது மற்றும் போதை மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டன. விருந்து நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது போதையில் இருந்த போலீஸ்காரர் நள்ளிரவில் திடீரென எழுந்து தனது துப்பாக்கியால் தூங்கிக் கொண்டிருந்தவர்களை சர மாரியாக சுட்டார். அதில், 9 போலீசார் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பாக தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா முஜாகித் நிருபர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். அதில், போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் தற்போது தங்களது இயக்கத்தில் இணைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
நேட்டோ படையினர் என நினைத்து தனது சக போலீஸ்காரர்களை தவறுதலாக சுட்டதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே, சுட்டுக் கொன்ற போலீஸ்காரரின் 2 சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக