பாகிஸ்தானிலுள்ள எம்கியூஎம் கட்சித் தலைவர் உள்பட 2 பேரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். வன்முறைச் சம்பவங்களில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர். கராச்சியின் பிஐபி காலனி பகுதியில் முத்தாஹித கெüமி இயக்க (எம்கியூஎம்) கட்சித் தலைவர்களுள் ஒருவரான மன்சூர் முக்தரின் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை புகுந்த மர்ம நபர், முக்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதைத் தடுக்க வந்த முக்தாரின் சகோதரரையும் அவர் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பியோடினார். இந்த சம்பவத்தில் முக்தாரின் மைத்துனி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் கராச்சி நகரில் காட்டுத் தீ போல பரவியது. சம்பவம் பற்றி அறிந்ததும் எம்கியூஎம் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். கராச்சி நகரில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனுக்கு தீவைத்தனர். அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் அவர்கள் அடித்து நொறுக்கினர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கும்பலைக் கலைத்தனர்.
வன்முறைச் சம்பவங்கள் கராச்சி மட்டுல்லாமல் மலிர், லந்தி, நஜிமாபாத் பகுதியிலும் நடந்தன. வன்முறைச் சம்பவங்களின் போது சிலர் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இதில் 3 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மன்சூர் காலனி, சுர்ஜானி டவுன், கொரங்கி பகுதிகளில் அதிக அளவு வன்முறை சம்பவங்கள் நடந்தன.
வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து கராச்சி நகரில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
கடைகள், வர்த்தக வளாகங்கள் மூடப்பட்டன. கராச்சி பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக