
ரெயில்வே நிர்வாகம் இந்த தாரக மந்திரத்தை தொலைத்ததுடன் பயணிகளையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பொதுவாக பாதுகாப்பானதுடன், கட்டணமும் குறைவாக இருப்பதால் பயணிகள் அதிகம் பேர் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர். மற்றொரு முக்கிய காரணம் வெளியூர்களுக்கு செல்பவர்கள் இரவில் ரெயிலில் ஏறினால் நன்றாக தூங்கி காலையில் தங்களது ஊரில் சென்று இறங்கலாம்.
இதுபோன்ற காரணங்களால் மற்ற வகை போக்குவரத்து சாதனங்களை விட ரெயில் போக்குவரத்தையே அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர்.ஆரம்ப காலங்களில் ரெயில்களில் இருந்த திருட்டு பயத்தை போலீஸ் பாதுகாப்பு உட்பட பல கடுமையான நடவடிக்கையால் அத்தகைய விரும்பத்தகாத செயல்களை ரெயில்வே நிர்வாகம் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்தது.
ஆனால் தற்போது பயணிகளுக்கு புதுவிதமான தலைவலியும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. ரெயில் பெட்டிகளில் ஏசி பெட்டிகள், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கைகளில் மூட்டைப்பூச்சிகள் கொத்துக் கொத்தாக காணப்படுவதால் இரவெல்லாம் மூட்டை பூச்சிகளின் கடியால் தூங்க முடியாமல் போவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
அத்துடன் கரப்பான் பூச்சிகள், பூரான்கள் மற்றும் எலிகளின் புகலிடமாகவும் ரெயில் பெட்டிகள் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் இவற்றின் நடமாட்டம் ரெயில் பெட்டிகளில் அதிகமாக காணப்படுகிறது. இவைகள் பயணிகளின் உடமைகளை சேதப்படுத்துவதுடன், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் பயமுறுத்தி வருகின்றன.
இருந்தாலும் வேறு வழியின்றி இவைகளுடன் அச்சத்துடனும், தூக்கமின்றியும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்கின்றனர். பயணிகளுக்கு ஏன் இந்த அவல நிலை, இதற்கு விடிவு காலமே பிறக்காதா? என்று ஏங்கும் பயணிகள் சார்பாக ரெயில்வே துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு எல்லாம் ரெயில் பெட்டிகளை இரவு நேரங்களில் பயன்படுத்திவிட்டு பகலில் பராமரிப்பு பணிகள் செய்யப்படும். நெடுந்தூரம் செல்லும் ரெயில்களின் பெட்டிகள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டும் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டும் வந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரெயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இதனால் சிக்கன நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பராமரிப்புக்காக முதன்மை பராமரிப்பு, இரண்டாம் தரமான பராமரிப்பு (பிரைமரி அண்டு செகண்டரி மெயின்டனன்ஸ்) என்று பிரிக்கப்பட்டுள்ளது. முதன்மை பராமரிப்பு பணியில் ஒரு ரெயில் 2,500 கி.மீ., தூரம் சென்று வந்த பிறகு தான் பராமரிக்கப்படுகிறது. அவ்வாறு 2500 கி.மீ., செல்வதாக இருந்தால் சாரசரியாக 5 நாட்கள் வரை ஆகிறது. அவ்வாறு பார்க்கும் போது 5 நாட்களுக்கு ஒருமுறை தான் ஒரு ரெயில் பராமரிக்கப்படும்.
பராமரிப்பு பணியை ரெயில்வே நிர்வாகம் கவனித்துக் கொண்டிருந்த போது பராமரிப்பில் குறையில்லாமல் இருந்தது. பராமரிப்பு பணியை ஒப்பந்தக்காரர்களிடம் எப்போது ரெயில்வே நிர்வாகம் விட்டதோ அப்போதே பயணிகளிடமிருந்து புகார்களும் அதிகளவில் வரத்தொடங்கியுள்ளன. இதனால் தற்போது ஏசி பெட்டிகளில் படுக்கை பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ரெயில்வே நிர்வாகமே கவனிக்கிறது.
இரண்டாம் தரமான பராமரிப்பு என்பது 3 மணிநேரம் ஒரு ஸ்டேஷனில் நிற்கும் ரெயிலுக்கு தண்ணீர் ஏற்றுவது, பெட்டிகளை சுத்தப்படுத்தும் பணி மட்டும் செய்யப்படுகிறது. மாறாக படுக்கை மாற்றுவது, மின்விசிறி பழுது பார்ப்பது போன்ற பணிகள் செய்வதில்லை. அதற்கு போதுமான ஊழியர்களும் இல்லை, பழுதான பொருட்களை மாற்றுவதற்கான புதிய பொருட்களும் இருப்பதில்லை.
இப்போது லாபம் கிடைக்கிறதா? அது கிடைத்தால் போதும் என்ற அளவில் ரெயில்கள் இயக்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒவ்வொரு ரெயிலும் 6 மாதத்திற்கு ஒரு முறை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பப்பட்டு புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு, படுக்கைகள், மின்விசிறி மற்றும் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பழுதுகள் நீக்கப்பட்டு வந்துள்ளன. சிக்கன நடவடிக்கையால் 6 மாதம் என்பது ஒரு ஆண்டாக உயர்த்தப்பட்டது. தற்போது அதனை ஒன்றரை ஆண்டுகளாக உயர்த்தியுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் தான் சில குறைகள் இருக்கின்றன
இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்த போது 6 மாதத்திற்கு ஒரு முறை ரெயில் பெட்டிகள் முற்றிலுமாக பராமரிக்கப்பட்டது. ஆனால் தற்போது கணக்கிலடங்காத அளவில் பயணிகள் பயணம் செய்யும் போது 6 மாதம் என்பதை 3 மாதமாக குறைத்திருக்க வேண்டும், ஆனால் அதனை ஒன்றரை ஆண்டுகளாக உயர்த்தியிருப்பதால் ரெயில் பெட்டிக்குள் எலியிலிருந்து அனைத்தும் வருகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் எலியை பிடிக்க பாம்பும் ரெயிலுக்குள் வரும் நிலை வரலாம். பயணிகள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்படலாம். பயணிகளை பொறுத்தவரை கட்டணத்தை வேண்டுமானாலும் அதிகரித்துக் கொள்ளுங்கள், ஆனால் ரெயில்வேயின் தாரக மந்திரமான பாதுகாப்பு, நேரம் தவறாமை, தூய்மை ஆகியவை முறையாக கிடைக்க வேண்டும் என்று பயணிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். துறையின் அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனிப்பார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக