டெல்லி: தலைநகர் டெல்லியில் யாருக்கும் பாதுகாப்பற்ற தன்மை நிலவுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி வெள்ளிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஞாயிறு இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவியும் அவரது நண்பரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த துணை ஆணையர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் மற்றும் நீதிபதி ராஜீவ் சகாய் என்ட்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்த வழக்கை எடுத்துக்கொண்டது. அப்போது நீதிபதிகள் தனி கவனம் எடுத்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு இன்னும் இரு தினங்களுக்கு அறிக்கை அளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கு பற்றி கருத்து கூறிய நீதிபதி முருகேசன், டெல்லியில் யாருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது நண்பருக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும், தேவையெனில் வேறு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கலாம் என்றும் கூறினார். ஞாயிறு இரவு பலாத்காரம் நிகழ்ந்த பேருந்து 40 நிமிடங்கள் நகரை வலம் வந்துள்ளது. அதில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பிய கூக்குரல் யாருடைய காதிலும் விழவில்லையா? போலீசார் அப்போது என்ன செய்து கொண்டிருந்தனர் என்று மாநகர காவல்துறை ஆணையரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க 5 விரைவு நீதிமன்றங்கள் அமைக்கவேண்டும் என்று டெல்லி மாநில முதல்வர் ஷீலா தீட்ஷித் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான அனுமதி உடனடியாக வழங்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக