சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது இமாச்சல் பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 459 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். குஜராத் மாநில தேர்தலும் நடைபெற வேண்டியிருந்ததால் ஒன்றரை மாதம் கழித்து இன்றுதான் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்குப் பதிவு தொடங்கி சில மணி நேரம் வரை பாஜக வெற்றி முகத்தில் இருந்தாலும் பின்னர் நிலைமை தலைகீழானது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் பாரதிய ஜனதா கட்சி 26 தொகுதிகளிலும் காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் வென்றிருக்கின்றன. கடந்த தேர்தலில் 41 தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருந்தது. இம்முறை படுதோல்வியை சந்தித்திருக்கிறது. கடந்த முறை காங்கிரஸ் 23 தொகுதிகளைத்தான் பெற்றிருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி மிகவும் உற்சாகத்தில் இருக்கிறது. முதல்வர் யார்? இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் வீர்பத்ரசிங் முதல்வராகக் கூடும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சராக இருந்த வீர்பத்ரசிங்குக்கு எதிராக ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றம் பதவி செய்ததைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்திருந்தார். ஆனால் இமாச்சல் மாநில காங்கிரஸ் தலைவராக வீர்பத்ரசிங்கை நியமித்து தேர்தலில் போட்டியிட உத்தரவிட்டது காங்கிரஸ் மேலிடம். இதனால் வீர்பத்ரசிங்குக்கு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் ஊழல் வழக்கு சிக்கல் இருப்பதால் ஆனந்த் சர்மா பெயர் அடிபடுகிறது இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் வீர்பத்ரசிங், சோனியா காந்திதான் இறுதி முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக