திங்கள், டிசம்பர் 17, 2012

ஜெயலலிதாவை பிரதமராக விட்டால் இந்தியாவே இருண்டு போய் விடும் - ஸ்டாலின் !

வேடசந்தூர்: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதாவை பிரதமராக்குவோம் என்று அதிமுகவினர் போகும் இடமெல்லாம் சொல்லி வருகின்றனர். ஆனால் இவர் பிரதமரானால் ஒட்டுமொத்த நாட்டையும் இருட்டாக்கி விடுவார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திண்டுக்கல்
மாவட்டம் வேடசந்தூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகையில், ஸ்டாலின் பேசியதாவது: இங்கு கூடியிருக்கின்ற தொண்டர்களின் கூட்டத்தை பார்த்தால் பொதுக்கூட்டம் அல்ல. மாநாடு போல தோன்றுகிறது. அந்த அளவுக்கு பொதுமக்கள் தற்போது நடக்கும் ஆட்சியின் மீது வெறுப்பில் உள்ளனர். திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். வேறு எந்த இயக்கத்திற்கும் இந்த சிறப்பு கிடையாது. திமுக தலைவர் கலைஞர் உடல் நலிவுற்றபோதும் தமிழக நலனுக்காக தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறார். தான் தள்ளாடினாலும் தமிழகம் தள்ளாடக்கூடாது என்ற நோக்கத்தில் அல்லும், பகலும் தலைவர் உழைத்து வருகிறார். தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஒளிமயமாக்குவேன் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் இன்று தமிழகத்தின் நிலை என்ன என்று மக்களுக்கு தெரியும். 3 மாதத்தில் மின்வெட்டுக்கு முடிவு காணப்படும் என்றார்கள். ஆனால் 2 மணிநேரமாக இருந்த மின்வெட்டு 20 மணி நேர மின்வெட்டாக மாறிவிட்டது. முந்தைய தி.மு.க ஆட்சியில் மின்தடை நேரம் பத்திரிக்கைகள் மூலம் அறிவிக்கப்பட்டது. தற்போது எந்த அறிவிப்பும் இல்லாமல் 20 மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தில் கொண்டுவந்த மின்திட்டங்களை நிறைவேற்றி இருந்தால் இன்று தமிழகம் இருண்ட மாநிலமாக இருந்திருக்காது. 2001 முதல் 2005 வரை எந்த மின் உற்பத்தி திட்டத்தையும் அதிமுக அரசு கொண்டுவரவில்லை. மாறாக எண்ணூர், உடன்குடி, வடசென்னை ஆகிய மின்திட்டங்களின் மூலம் 2000 மெகாவாட் மின்திட்டங்களும், சர்க்கரை ஆலைகளிலிருந்து 183 மெகாவாட் திட்டங்களும் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. இந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தாமல் விட்டதால் தற்போது மின்தடை ஏற்பட்டுள்ளது. இப்படி நான் கூறுவது பொய் என்றால், திராணி இருந்தால் என்மீது ஜெயலலிதா அரசு வழக்கு தொடரட்டும். அதை நான் ஆதாரங்களுடன் சந்திக்க தயாராக உள்ளேன். மின்தடை காரணமாக தொழிலாளர்கள், விவசாயிகள் தற்கொலை செய்யும் அளவுக்கு மனம் உடைந்த நிலையில் உள்ளனர். பள்ளி மாணவர்கள் தேர்வு நேரங்களில் படிக்க முடியாமல் மிகவும் சிரமமப்பட்டு வருகின்றனர். அதிமுகவுக்கு தகுந்த பாடம் புகட்ட பாராளுமன்ற தேர்தலுக்காக பொதுமக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்துவதை விட சட்டசபைத்தேர்தல் நடத்துவதையே மக்கள் ஆவலுடன் விரும்புகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். அதிமுக செயற்குழு கூட்டங்களில் பாராளுமன்றத்தில் 40 தொகுதிகளிலும் வென்று அம்மாவை பிரதமராக்குவோம் என்கின்றனர். முதலமைச்சராக இருந்து தமிழகத்தை இருண்ட மாநிலமாக ஆக்கிவிட்டார்கள். பிரதமரானால் இந்தியாவே இருளாகிவிடும் என்றார் ஸ்டாலின்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக