டெல்லி: 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு உணவு தானியங்கள் வாங்க ரூ600 போதுமானது என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லி மாநில அரசின் சார்பிலான 'அன்னஸ்ரீ யோஜனா' என்ற உணவு தானியங்களுக்கு மாதம் ரூ600 நிதி உதவி வழங்கும் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித், 5 பேர் கொண்ட 1 குடும்பத்துக்கு 1 மாதத்துக்கான உணவுக்கான பொருட்களை வாங்க ரூ600 போதும் என்று கூறியிருக்கிறார். இந்தக் கருத்தை ஷீலா தீட்சித் கூறிய போது சோனியாவும் மேடையில்தான் இருந்திருக்கிறார். ஷீலா தீட்சித்தின் இந்த கருத்து இப்பொழுது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. ரூ600 ஐ வைத்துக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் எப்படி 1 மாதத்துக்கான உணவுப் பொருட்களை வாங்க முடியும் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தையும் எதிர்க்கட்சிகளும் கையிலெடுத்து ஷீலாவுக்கு எதிராக கண்டனக் குரல்களை தெரிவித்து வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக