டெல்லி: டெல்லி மாநில அரசு வழங்கிய உபரி மின்சாரத்தை தமிழகத்திற்குத் தரவே முடியாது, அதற்கான வாய்ப்பு, வசதி இல்லை, முடியவே முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் திரும்பத் திரும்பக் கூறி வரும் மத்திய அரசு, தற்போது அந்த மின்சாரத்தை இரண்டாகப் பிரித்து தமிழகத்தின் பக்கத்து மாநிலங்களான
கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் சத்தமின்றி அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி தமிழக மக்களை அதிர வைத்துள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள இந்திரா காந்தி அனல் மின் நிலையத்திலிருந்து டெல்லிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தில், 231.17 மெகாவாட் மின்சாரத்தை டெல்லி அரசு திருப்பிக் கொடுத்தது. இந்த மின்சாரத்தை அப்படியே மின்பற்றாக்குறையால் அவதிப்படும் எங்களுக்குத் தர வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால் அதை நிராகரித்து விட்டது மத்திய அரசு. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டது தமிழக அரசு. அங்கு மத்திய அரசு தாக்கல் செய்த பதிலில், தமிழகத்திற்கு டெல்லியின் மின்சாரத்தை வழங்க முடியாது. அதற்கான மின் கட்டமைப்பு வசதி இல்லை என்று கூறி விட்டது.
ஆனால் தற்போது இதே மின்சாரத்தை காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் பிரித்து அனுப்பி வருகிறார்களாம். ஜஜ்ஜார் மின் நிலையத்திலிருந்து மே 31ம் தேதி வரை கேரளாவுக்கு தினசரி 100 மெகாவாட் மினசாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம். அதன்படி மின்சாரமும் தற்போது போய்க் கொண்டுள்ளதாம். ஆந்திராவுக்கு 131.17 மெகாவாட் மின்சாரம் போய்க் கொண்டிருக்கிறதாம்.
தமிழகத்திற்குத் தர முடியாது என்று நிராகரிக்கப்பட்ட மின்சாரத்தை தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மத்திய அரசு அனுப்பி வருவது தமிழகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக