முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசு சார்பில் செலவிடப்பட்ட தொகை விபரங்களைவழங்க வேண்டும் என சுபாஷ் அகர்வால் என்பவர் தலைமை தகவல் உரிமை ஆணயத்திடம் மனு செய்திருந்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய தலைமை தகவல் ஆணையாளர் சத்யநந்தா மிஷ்ரா கூறியதாவது :-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் போன்ற பிரமுகர்களின் வெளிநாட்டு பயணச் செலவு விபரங்களை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரேமாதிரியாக பலர் மனு செய்கின்றனர்.
இந்த பிரமுகர்களின் அரசு முறை வெளிநாட்டு பயண விபரங்களை பகிரங்கமாக வெளியிடுவதில் பாதுகாப்பு தொடர்பான கோணம் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எல்லாவற்றிலும் வெளிப்படையானதன்மை வேண்டும் என்ற மக்களின் ஆர்வம் அதிகரித்து வரும் இந்த காலத்தில்
கூடுமான வரை இதைப் போன்ற பயண விபரங்கள் பொது தளங்களில் வெளியிடப்பட வேண்டும். ஜனாதிபதியின் அரசு முறையிலான வெளிநாட்டு பயணங்கள், அவருடன் செல்லும் குழுவினர் பற்றிய தகவல்களை
பொதுமக்கள் அறிந்துக் கொள்ளும் வகையில், ஜனாதிபதியின் செயலகம், தங்களது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என மத்திய தகவல் கமிஷன் பரிந்துரை செய்கின்றது.
சாத்தியப்படுமானால், ஒவ்வொரு பயணத்தின் போதும் செய்யப்பட்ட மொத்த செலவுகள் குறித்து தனித்தனியாகவோ, ஆண்டுக்கு ஒரு முறை மொத்தமாகவோ ஜனாதிபதி மாளிகை இணையதளத்தில் செலவு விபரங்களை வெளியிடலாம்.
இதன் மூலம், வி.ஐ.பி.க்களின் வெளிநாட்டு பயணச் செலவினங்களை அறிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் மக்களை திருப்திபடுத்த முடியும் என தகவல் ஆணையம் கருதுகின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக