திங்கள், டிசம்பர் 03, 2012

காவிரிப் பிரச்சினை: கர்நாடக பஸ்கள் சிறைபிடிப்பு- ரயில் மறியல்- ஷெட்டர் கொடும்பாவி எரிப்பு !

ஈரோடு: தமிழகத்துக்கு உரிய காவிரி நதிநீரை திறந்துவிட மறுத்து வரும் கர்நாடகத்தைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் கர்நாடக பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. காவிரி நதிநீர் விவகாரத்தைத் தொடர்ந்து தமிழக- கர்நாடக வனப்பகுதிகளில் தமிழர்களை கர்நாடக அரசு வெளியேற்றி வருவதாக
தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நாம் தமிழர் கட்சியினர் இன்று காலை போராட்டம் நடத்தினர். அப்போது ஈரோட்டில் இருந்து மைசூர் நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்தை அவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் புதுக்கோட்டையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோதும் மீண்டும் நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் கைது செய்யபட்டனர்.
இதனிடையே கோவை அருகே அன்னூரில் தந்தை பெரியார் தி.க.வினர் 50 பேர், கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக