புதுடெல்லி:அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் விரும்பினார் என்றும், அதற்காக திட்டத்தையும் தயாரித்து வைத்திருந்தார் எனவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.வி.கே.பிரசாத் கூறியுள்ளார். நரசிம்மராவ் பிரதமராக பதவி வகித்த வேளையில் அவருடைய ஊடக ஆலோசகராகவும், உதவி செயலாளராகவும் பணியாற்றியவர் பி.வி.கே.பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2011-ஆம் ஆண்டு வெளியிட்ட தெலுங்கு மொழியில்
எழுதப்பட்ட நூலில் இத்தகவலை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் சிருங்கேரி சுவாமியை கெளரவிக்கும் குருவந்தனம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்பொழுது பிரசாத் மீண்டும் இத்தகவலை குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில் கூறியது: அயோத்தியில் ராமர்கோயிலை கட்ட விரும்பிய ராவ், இதற்காக ஒரு திட்டத்தையும் தயாரித்து வைத்திருந்தார். ஹிந்துமதத்தில் அனைவரும் அங்கீகரிக்கும் சன்னியாசிகளின் கூட்டமைப்பை உருவாக்கி அவர்களின் தலைமையில் கோயிலை கட்டவேண்டும் என்பதுதான் நோக்கம். சிருங்கேரி சுவாமிகள் ஸ்ரீ பாரதி தீர்த்தா சுவாமியை தலைவராக கொண்டு கமிட்டிக்கு அதிகமான ஆதரவு கிடைக்கும் என்று ராவ் நம்பியிருந்தார்.
அயோத்தியில் இதர சாமியார்களும், கட்டிகளின்(Gaddis)தலைவர்களும் இந்த கமிட்டிக்கு பலம் சேர்ப்பார்கள் என்று நரசிம்மராவ் கருதினார். மிகவும் முயற்சி செய்து சிருங்கேரி சுவாமிகளை இத்திட்டத்திற்கு சம்மதிக்க வைத்தார். இதே வேளையில் நரசிம்மராவ் டெல்லியில் ’சதுர்மாஸ தீக்ஷா’ அதாவது நான்கு மாதங்களைக்கொண்ட வழிப்பாட்டை நடத்தியிருந்தார் என்று பிரசாத் தனது உரையில் குறிப்பிட்டார்.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்படும் என்று நரசிம்மராவுக்கோ, அத்வானிக்கோ, வாஜ்பாயிக்கோ தெரியாது என்று பிரசாத்தும், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான குனால் கிஷோரும் முன்னர் கூறியிருந்தனர். ஆனால், வி.ஹெச்.பி, பா.ஜ.கவினரை அகற்றிவிட்டு ஹிந்து சன்னியாசிகளை ஒன்றிணைக்கும் முயற்சியை நரசிம்மராவ் இவர்களிடமே(பிரசாத் மற்றும் குனால் கிஷோர்) ஒப்படைத்தார் என்று 2011-ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியிட்ட ‘Wheels Behind the Veil (CMs, PMs and beyond)’ என்ற நூலில் விவரித்துள்ளார் பிரசாத்.
முன்னாள் கேபினட் செயலாளர் நரேஷ் சந்திரனும் இக்கமிட்டியில் உறுப்பினர் ஆவார். முன்னாள் மத்தியபிரதேச மாநில முதல்வரும் தற்போதைய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங்கும் இத்திட்டத்திற்கு தனது பங்களிப்பை அளித்திருந்தார் என்று பிரசாத் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
2 வருடங்களாக முயற்சி செய்து ட்ரஸ்ட் பதிவுச்செய்யப்பட்ட போதிலும் பொதுத் தேர்தல் வந்தவுடன் நரசிம்மராவ், தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த துவங்கினார். 1996-ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதால் நரசிம்மராவின் எண்ணம் பலிக்காமல் போய்விட்டது என்று பிரசாத் தனது நூலில் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக