லக்னோ:அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமராகத் தாம் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் சூசகமாகத் தெரிவித்துள்ளார். முலாயம் சிங், லக்னோவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது உத்தரப்பிரதேச மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின்
முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியும் உடனிருந்தார். “2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவியைப் பெற முயற்சிப்பீர்களா?’ என்று முலாயம் சிங்கிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. ஏற்கெனவே, உத்தரப் பிரதேச முதல்வர் பதவிக்கான போட்டியிலும் நான் இல்லை. ஆனால், சூழ்நிலை எனக்கு அந்தப் பதவியை வழங்கியது. அனைத்தும் சூழ்நிலையைப் பொறுத்ததுதான்” என்று அவர் பதிலளித்தார்.
என்.டி.திவாரியிடம் “சமாஜவாதி கட்சியில் நீங்கள் சேர்வீர்களா? மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “சோஷலிச சித்தாந்தத்தைப் பின்பற்றுவதால் நான் சமாஜவாதி நபர்தான். எனக்கு இப்போது 88 வயது ஆகிறது. தேர்தலோ 2014 இல் நடக்கப் போகிறது. என்னால் தேர்தலில் போட்டியிட இயலாது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டைப் பொறுத்த வரை, அது நாட்டின் நலனுக்கு உகந்தது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதே இப்போதைய தேவையாகும். எனினும், எஃப்.டி.ஐ. முடிவை ஆதரிக்கும் விஷயத்தில் எனது கருத்தை சமாஜ்வாதி கட்சி மீது திணிக்க மாட்டேன். உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு முதலீடுகள் அவசியம். நாட்டின் நலனுக்கு எது உகந்ததோ அதை முலாயம் சிங் செய்வார். நான் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளேனா என்று கேட்கிறீர்கள்.
இது போன்ற கேள்விகளைக் கேட்கக் கூடாது. ராகுல் பிரதமர் ஆவாரா, மாட்டாரா என்பதைக் காலம்தான் கூறும்” என்றார் திவாரி.
முலாயம் சிங்கிடம் எஃப்.டி.ஐ. தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடக்க உள்ள விவாதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு,
“அந்த விவாதத்தில் சமாஜ்வாதி கலந்துகொள்ளும். அதன் மீதான வாக்கெடுப்பு குறித்து எங்கள் கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவெடுக்கும்” என்று பதிலளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக