சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பது குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெறும்போது தெரிவிப்போம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் தனித்தனியாக தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்த இரு கட்சிகளும் தங்களை ஆதரிப்பார்கள் என்பதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உறுதியாக உள்ளது.
இன்று விவாதம், நாளை வாக்கெடுப்பு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து புதன்கிழமை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அடுத்த இருநாள்களில் மாநிலங்களவையில் விவாதம் நடைபெற இருக்கிறது.
ஆதரவு எம்.பி.க்கள்: 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், அன்னிய நேரடி முதலீட்டை ஆதரிக்கும் திமுகவின் 18 எம்.பி.க்களையும் சேர்த்து மத்திய அரசுக்கு இப்போது 265 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. அனைத்து உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கும் பட்சத்தில் வாக்கெடுப்பில் வெற்றி பெற பாதிக்கு மேல் அதாவது 273 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதில் 22 எம்.பி.களைக் கொண்ட சமாஜவாதி, 21 உறுப்பினர்களைக் கொண்ட பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் ஆதரவைப் பெறும்போது 300-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் வாக்குகளை மத்திய அரசு பெற முடியும்.
மாநிலங்களவையில்... அதே நேரத்தில் 244 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. 94 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். நியமன உறுப்பினர்கள் 10 பேர் அரசை ஆதரிக்கலாம். சுயேச்சை எம்.பி.க்களில் 4 பேரது ஆதரவைப் பெற முடியும்.
இந்த சூழ்நிலையில் அரசுக்கு வெளியே இருந்து ஆதரிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி (15 எம்.பி.க்கள்), சமாஜவாதி (9 எம்.பி.க்கள்) ஆதரவு கண்டிப்பாக தேவை.
"மக்களவையில் தெரிவிப்பேன்' இந்நிலையில் சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவிடம் செய்தியாளர்கள் தில்லியில் திங்கள்கிழமை இது தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நான் எதைக் கூற வேண்டுமோ, அதனை மக்களவையில் மட்டுமே தெரிவிப்பேன்' என்று முலாயம் சிங் கூறிவிட்டார்.
மாயாவதியும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசிய அவர் கூறியது: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அன்னிய முதலீடு தேவை என்பதே எங்கள் கட்சியின் கருத்து. ஆனால் அன்னிய முதலீட்டுக் கொள்கை சில கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட வேண்டும். ஏழைகள், நடுத்தர மக்களை பாதிக்கும் அம்சங்களை நீக்கிவிட வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டத்தில், இதனை விரும்பாத மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் அனுமதிக்கத் தேவையில்லை என்று கூறியிருப்பது மிகவும் சாதகமான அம்சம். இதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டை கட்டாயப்படுத்த முடியாது.
வாக்கெடுப்பின் போது இறுதி முடிவு: அதே நேரத்தில் இந்த விஷயத்தில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக சில கட்சிகள் முடிவெடுத்து செயல்படுகின்றன. இது குறித்தும் எங்கள் கட்சி தீவிரமாக யோசித்து வருகிறது.
ஆனால், சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதில் இப்போது வரை எங்கள் கட்சி எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை. எனினும் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் வரும்போது ஏற்கெனவே கூறிய இரு விஷயங்களையும் பரிசீலித்து இறுதி முடிவை எடுப்போம். நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும்போது நாட்டின் நலனையும் மனதில் கொண்டு செயல்படுவோம்.
அன்னிய முதலீட்டுக்கு எதிரி அல்ல: அன்னிய முதலீடு, வெளிநாட்டுக் கடன் போன்றவற்றுக்கு எங்கள் கட்சி எப்போதுமே எதிரானது அல்ல. வளரும் நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இவை இரண்டையுமே சார்ந்துள்ளன. பல நாடுகள் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்ததன் மூலம் வளர்ச்சியடைந்துள்ளன.
உள்நாட்டில் போதுமான வளங்கள் இல்லாதபோது வளர்ச்சி சாத்தியமாகாது. எனினும் அன்னிய முதலீட்டிலும், கடனிலும் ஒரு வரைமுறை தேவை.
அன்னிய நேரடி முதலீடு மிகப்பெரிய பலன்களைத் தரும் என்று மத்திய அரசும், நாட்டை மிகப்பெரிய வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்லும் என்று அதனை எதிர்க்கும் கட்சிகளும் கூறி வருகின்றன. எனவே அதன் அனைத்து அம்சங்களையும் முழுமையாக பரிசீலிக்க வேண்டும்.
பாதிப்புகளும், கவலையும்... ஏனெனில் தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் அன்னிய நேரடி முதலீட்டை வரவேற்றன. ஆனால் அவை இப்போதும் பொருளாதார ரீதியாக பிரச்னையில்தான் உள்ளன.
எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது நிச்சயமாக உள்நாட்டு பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்பது விவசாயிகள், சிறு வணிகர்கள், தொழிலாளர்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பகுஜன் சமாஜ் கவலை கொண்டுள்ளது.
சிறு வியாபாரிகள் பெரும் பாதிப்பை சந்திப்பார்கள், அவர்களது முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற அச்சம் நிலவுகிறது.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டால் பொருள்களின் விலை குறையும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் இதுவரை கடைப்பிடித்த தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான் இப்போது ஏற்பட்டுள்ள விலை உயர்வுக்கும், வேலையின்மை அதிகரிப்புக்கும் காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்திய சில்லறை விற்பனை சந்தை மிகப்பெரியது, அதிகமான நுகர்வோர்களைக் கொண்டது. எனவே அவற்றைப் பிடிக்க வேண்டும் என்பது பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கமாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார் மாயாவதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக