சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மாற்று வழித்தடத்தில் செயல்படுத்துவது பொருளாதாரரீதியாக சாத்தியம் இல்லை என சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி குழு அளித்த அறிக்கை மீது கருத்து தெரிவிக்க கூடுதல் அவகாசம் வழங்கும்படி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கோரியுள்ளது.
இதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறும் என்று கூறியது.
"சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை' என்று தமிழக அரசு கடந்த அக்டோபரில் நடைபெற்ற விசாரணையின்போது நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் சேதுக் கால்வாய்த் திட்டத்துக்கு எதிரான வழக்கு நீதிபதிகள் எச்.எல்.தட்டூ, சந்திரமௌளி குமார் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது "நிபுணர் குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் தேவை' என்று மத்திய அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். பின்னர் ""இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும்'' என்று கூறி வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பச்சௌரி குழுவின் அறிக்கையின் மீது மத்திய அரசு தனது நிலையைத் தெளிவுபடுத்த இதுவரை மூன்று முறை அவகாசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்; அதனால் அந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதிக்க 2007-ம் ஆண்டில் மறுத்தது.
இதையடுத்து, "சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் "ராமர் பாலம்' இருப்பதாக சிலர் நம்புகின்றனர். அதனால் அப்பகுதியை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும்' என்று சுப்பிரமணியன் சுவாமியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக 2007ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "மாற்று வழியில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளதா? அத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமா?' என்பதைக் கண்டறிய நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சௌரி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைக்க 2008ஆம் ஆண்டில் உத்தரவிட்டது.
இதையடுத்து கடந்த நான்கு ஆண்டுகளாக ஆய்வு செய்த பச்சௌரி குழு, அதன் அறிக்கையை கடந்த ஜூலை மாதம் 2ஆம் தேதி தாக்கல் செய்தது. அதன் 37 பக்க அறிக்கையில் "மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது பொருளாதார, சுற்றுச்சூழல்ரீதியாக சாத்தியமில்லை' என்று கூறப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக