ஞாயிறு, டிசம்பர் 16, 2012

ராமதாசுடன் நான் இணக்கத்தை விரும்புகிறேன் : திருமாவளவன் !

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமைதாங்கினார். கூட்டத்தில் பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன், முகமது யுசுப், செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, தலைமை நிலைய செயலாளர்கள் பாவலன், மடிப்பாக்கம் வெற்றிச்செல்வன், கொள்கைபரப்பு துணை
செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, வழக்கறிஞர் பழனிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தர்மபுரியில் நடைபெற்ற சாதிவெறி கலவரத்திற்கு சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். தலித் மக்களுக்கு எதராக சாதி வெறியை தூண்டும் வகையில் சிலர் தொடர்ந்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டிய குற்றச்செயலாகும்.

சாதி வெறியை தூண்டும்படி செயல்படும் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தர்மபுரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் முறையாக செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக வீடு கட்டிக்கொடுக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான பதவி உயர்வில் இடஒதுக்கீடு குறித்த அரசியல் சட்டதிருத்த மசோதாவை வரவேற்றுள்ள அனைத்து கட்சியினரையும் விடுதலை சிறுத்தைகள் பாராட்டுகிறது.

கூடங்குளம் அணுமின் உலையை திறக்கக்கூடாது என்பதில் விடுதலை சிறுத்தைகள் உறுதியாக இருக்கிறது. மத்திய அரசு அந்த முயற்சியை கைவிட வேண்டும். பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 1 1/2 வருடங்கள் உள்ளது. தற்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இல்லை ஒரு அமைப்பும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் பேசி உள்ளதாக நிருபர்களாகிய நீங்கள் சொல்கின்றீர்கள். தொல்.திருமாவளவன் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன். அவர் தமிழகம் முழுவதும் வலம் வரவேண்டும் அதற்கு நான் துணையாக இருக்கிறேன் என்று மேடை தோறும் முழங்கிய டாக்டர் ராமதாசை நான் எண்ணிப்பார்க்கிறேன் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன். 

டாக்டர் ராமதாசுடன் நான் இணக்கத்தை விரும்புகிறேன். மறுபடியும் அவரது முகத்தை பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன். மறுபடியும் அவரிடம் பேசுவதற்கான வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆகவே நான் வார்தைகளை அளந்து பேசுகிறேன். நேருக்கு நேர் சந்திப்பதற்கு நீங்கள் (நிருபர்கள்) ஏற்பாடு செய்யுங்கள்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக