திங்கள், டிசம்பர் 03, 2012

எனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துப்பாருங்கள்: பா.ஜனதா கட்சி தலைமைக்கு எடியூரப்பா சவால் !

பாரதீய ஜனதா கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்று கூறி வந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அந்த கட்சியின் உறுப்பினர் பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்தார். இதையட்டி பெங்களூர் சுதந்திர பூங்காவில் இருந்து விதான சவுதாவுக்கு ஊர்வலமாக சென்று ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜனதா தலைவர்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் பெல்காமில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாருங்கள் என்று அவர் பா.ஜனதா தலைமைக்கு சவால் விடுத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெகதீஷ் ஷெட்டரை நான் முதல்-மந்திரி ஆக்கினேன். அதனால் அவருடைய அரசு தொடர்ந்து ஆட்சி நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பமாகும். ஆனால் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் எண்ணம் பா.ஜனதா தலைவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. எனவே, பா.ஜனதா தலைவர்கள் கர்நாடக அரசை கலைத்துவிட வேண்டும். இதற்கு எனது ஆட்சேபனை இல்லை. 

இது தொடர்பாக பா.ஜனதா எடுக்கும் எந்த முடிவையும் நான் வரவேற்கிறேன். என்னுடைய ஆதரவாளர்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. நாளை, நாளை மறுநாள் என்று காலத்தை வீணாக்க வேண்டாம். வேண்டுமென்றால் என்னுடைய ஆதரவாளர்கள் மீது இன்றே நடவடிக்கை எடுக்கட்டும். அதற்கு எனது ஆட்சேபனை இல்லை.

நான் ராஜினாமா செய்தபோது பெங்களூர் சுதந்திர பூங்காவில் நடந்த கூட்டத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக கலந்து கொண்டனர். அதேபோல் ஹாவேரியில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் கர்நாடக ஜனதா கட்சியின் மாநாட்டில் மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களுக்கு எதிராகவும் முடிந்தால் நடவடிக்கை எடுத்து பாருங்கள். அதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பயமும் இல்லை. நடவடிக்கை எடுங்கள்.

காங்கிரஸ் கட்சியின் சதித்திட்டத்தால் நான் கட்சியை தொடங்கி இருக்கிறேன் என்று எச்.டி.குமாரசாமி கருத்து தெரிவித்து இருப்பது சரியல்ல. எலும்பு இல்லாத நாக்கால் எது வேண்டுமானாலும் பேசலாம். இதன் மூலம் என்னை பார்த்து பயம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. நான் யாருடைய தயவிலும் இல்லை. எனக்கு யாருடைய தயவும் தேவை இல்லை. இறைவன் மற்றும் மக்களை மட்டுமே நான் நம்புகிறேன். இதை நான் அடிக்கடி சொல்லி வருகிறேன். மக்கள் என்னை கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை, விசுவாசம் எனக்கு உள்ளது.

ஆட்சியை விட்டு கீழே இறங்கி 1 1/2 ஆண்டு ஆகியும் எனக்கு மக்கள் செல்வாக்கு குறையவில்லை. என் மீது அன்பு, விசுவாசத்தை மக்கள் காட்டுகிறார்கள். தேர்தலில் மக்கள் என்ன தீர்ப்பு கொடுக்கிறார்களோ அதற்கு நான் தலைவணங்குவேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக