சிவாஜி பூங்காவை "சிவ தீர்த்தம்” என பெயர் மாற்ற வேண்டும் என்ற சிவசேனை கட்சியின் திட்டத்துக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரிஹன் மும்பை மாநகராட்சி (பிஎம்சி) கூட்டத்தில், சிவாஜி பூங்காவை "சிவ தீர்த்தம்” என பெயர் மாற்ற வேண்டும் என்று சிவசேனை கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இந்த பூங்காவுக்கு கடந்த 1927-ல் சிவாஜி பூங்கா என ஆங்கிலேயர்கள் பெயர் வைத்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 11 கோடி மக்களின் தெய்வமாக மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மதிக்கப்படுகிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் பெயரை மாற்ற அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தசரா பண்டிகையின்போது ஆண்டுதோறும் சிவாஜி பூங்காவில் உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில், மறைந்த அவரது உடல் சிவாஜி பூங்காவில் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து, தாக்கரேவுக்கு அங்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என சிவசேனை கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், பூங்காவின் பெயரை மாற்ற கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக