புதன், டிசம்பர் 05, 2012

தர்மபுரி கலவரம்: தலித்களின் ரூ.4 கோடி நகைகள் சூறை; மொத்த சேதம் ரூ.5.5 கோடி-கலெக்டர் அறிக்கை !

சென்னை: தர்மபுரி அருகே நடந்த ஜாதிக் கலவரத்தில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நகைககள், பணம்  உள்பட தலித் மக்களுக்குச் சொந்தமான ரூ. 5.55 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ததையடுத்து கடந்த மாதம் 7ம் தேதி நாயக்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய 3 கிராமங்களில் உள்ள தலித் கிராமங்கள் மீது பயங்கர தாக்குதல் நடந்தது. தலித்களின் வீடுகள், உடமைகள் சூறையாடப்பட்டன, தீயிட்டு கொளுத்தப்பட்டன. இந்தச் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் செங்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மாவட்ட கலெக்டர், எஸ்.பியை, சஸ்பெண்ட் செய்யக் கோரியும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களுக்கு பதிலளிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும், மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பிக்கு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது.
இந் நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தர்மபுரி மாவட்ட கலெக்டர் லில்லி அளித்த அறிக்கையை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தலித் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 297 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 4 கோடி மதிப்புள்ள நகைககள், பணம் உள்பட தலித் மக்களுக்குச் சொந்தமான ரூ. 5.56 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கலவரம் தொடர்பாக இரு பிரிவினர் மீதும் மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 142 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்களும் புலன் விசாரணையை துவங்கி விட்டனர்.

இந்த சம்பவத்தின்போது தங்கள் கடமையை சரிவர செய்யத் தவறிய தர்மபுரி டிஎஸ்பி கோபி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன், பெருமாள் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வருவாய்க் கோட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ. 50,000 வீதம் மொத்தம் ரூ. 1.33 கோடி முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் நிவாரணம் வழங்கப்படும்.
297 குடும்பங்களைச் சேர்ந்த 1,200 பேருக்கு கடந்த மாதம் 8ம் தேதி முதல் 3 வேளை உணவும், குழந்தைகளுக்கு பால் போன்றவையும் வழங்கப்பட்டு வருகின்றன.
முழுமையாக சேதப்படுத்தப்பட்ட 37 வீடுகளை புதிதாக கட்டிக் கொடுக்க ரூ. 99 லட்சத்துக்கு ஒப்புதல் அளிக்க திட்டம் அனுப்பப்பட்டுள்ளது. 156 வீடுகளை செப்பனிட, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் இதர பிரிவினரை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம், அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகம் போலீஸ் சுதந்திரமாக நியாயமாக செயல்படுகின்றன. எந்த குறுக்கீடும் இல்லை. சட்டப்படி அனைத்து நிவாரணங்களும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு அமைதி நிலவுகிறது. சி.பி.சி.ஐ.டி விசாரணை ஆரம்பித்துவிட்டதால் சி.பி.ஐ., விசாரணை என்ற கேள்வியே எழவில்லை.
இவ்வாறு கலெக்டரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக