வியாழன், டிசம்பர் 13, 2012

12.12.12 - பகல் 12.12 மணிக்கு தற்கொலை மரணத்தை நிர்ணயித்தவர் 1 மணி நேரம் முன்னதாக உயிரிழந்தார் !

12.12.12 என்ற அபூர்வ தேதி கொண்ட நேற்று, பலர் நிச்சயதார்த்தம், திருமணம் ஆகியவற்றுக்கு நாள் குறித்திருந்தது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், தனது மரணத்தை தற்கொலையின் மூலம் தேர்ந்தெடுத்த ஒருவர், அதற்கான முகூர்த்த நேரமாக 12.12.12, பகல் 12.12 மணியை நிர்ணயித்தார். உத்தரபிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டம் நரோரா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா பால். தனது பண்னையில் பூச்செடிகளை வளர்த்து, வியாபாரம் செய்து வந்தார். மனைவி, 2 மகள்கள், மகன் ஆகியோர் கொண்ட அழகான குடும்பம் இருந்தும், இவர் மனதில் ஓர் வினோத ஆசை தோன்றியது. 

மனிதர்களின் மரணத்தை கடவுள் தான் நிர்ணயம் செய்கின்றார் என்று எல்லோரும் கூறுகின்றார்களே..! நமது மரணத்தை நாமே நிர்ணயித்துக் கொண்டால் என்ன? என்ற தாந்தோன்றி எண்ணம் இவரது மனதில் உதயமானது. 

டெல்லி அருகே உள்ள காசியாபாத்திற்கு சென்ற கிருஷ்ணா பால், பிரதாப் விகார் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள 80 அடி உயர குடிநீர் தொட்டியின் ஏணியில் 'மளமள' வென்று தாவி ஏறினார். காலை 10 மாணியளவில் தண்ணீர் தொட்டி மீது ஏறிய அவர், ஒரு பையில் கற்களையும் ஒரு கயிறையும் கொண்டு சென்றார். 

தனது மரண வாக்குமூலத்தை கூட அவர் 12 பக்கங்களில் எழுதியிருந்தார். அந்த வாக்குமூலத்தை 12 செட் ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்த அவர், தண்ணீர் தொட்டியின் உச்சியில் ஏறி நின்றார். அங்கிருந்த படி, தனது தற்கொலை வாக்குமூலத்தில் ஜெராக்ஸ் பிரதிகளை கீழே வீசி எறிந்தார். 

அவரது தற்கொலை வாக்கு மூலத்தில் கிருஷ்ணா பால் கூறியிருந்ததாவது:- 

கடவுளின் விருப்பப்படி 12.12.1972 அன்று நான் பிறந்தேன் ஆனால், என் பெற்றோர்கள் என்னை பள்ளியில் சேர்க்கும் போது என்   பிறந்த தேதியை 10.10.1972 ஆக பதிவு செய்து விட்டனர். கடவுளின் விருப்பத்திற்கு மாறாக, கடவுளுக்கே சவால் விடும் வகையில், கடவுளின் கையில் உள்ள என் மரண விதியை, என்கையில் நான் எடுத்துக் கொண்டேன். 

என் மரணத்தின் மூலம் நான் சத்திய யுகத்தை வரவழைக்கப் போகிறேன்' இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது. தனது கழுத்தில் கயிற்றைக் கட்டிக் கொண்ட அவர், 80 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில், கத்திக் கொண்டே பாய்வதற்கு முற்பட்டார். 

கீழே நின்றிருந்தவர்கள், இதைக் கண்டு பதற்றமடைந்தார்கள் அவர்களில் சிலர், கிருஷ்ணா பாலை காப்பாற்ற ஏணிப்படிகளில் ஏறி மேலே செல்ல முயற்சித்தனர். பையில் கொண்டு போயிருந்த கற்களால், தன்னை காப்பாற்ற வந்தவர்கள் மீது அவர் எறியத்தொடங்கினார். பொது மக்களில் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

விஜய் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை முடிவை கைவிட்டு கீழே இறங்கி வரும்படி கூறினர். 'கடவுளுக்கே சவால் விட்டு இந்த முடிவை எடுத்தவன் நான். நீங்கள் என்ன? கடவுளைவிட பெரியவர்களா? உங்கள் முடிவுக்கு நான் கட்டுப்பட மாட்டேன். 

என் முடிவை யாராலும் மாற்ற முடியாது என்று கூறியபடி, சரியாக காலை 11.05 மணிக்கு தண்ணீர் தொட்டிக்குள் குதித்தார், கிருஷ்ணா பால். அவரை பின்தொடர்ந்து, போலீசாரும் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து, அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

ஆனால், வரும் வழியிலேயே கிருஷ்ணா பாலின் உயிர் பிரிந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். 'அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார்கள். ஆனால், அது பலிக்கவில்லை. கிருஷ்ணா பால் மனநோயாளியாக இருக்கலாம்' என்று காசியாபாத் போலீஸ் சூப்பிரண்டு ஷிவ் ஷங்கர் சிங் யாதவ் நிருபர்களிடம் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக