சனி, டிசம்பர் 17, 2011

பாரத ரத்னா விருது: விதியில்(வீதியில்) திருத்தம்!

புது தில்லி, டிச.16: பாரத ரத்னா விருது பெறுவதற்கான விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் இந்த விருதை பெறுவது சாத்தியமாகி உள்ளது. கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் பொது சேவை துறையில் சாதித்தவர்கள் மட்டுமே பாரத ரத்னா விருது பெற முடியும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. பிற துறைகளில் சாதித்தவர்களும் இந்த விருதை பெற முடியும் என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டு
நவம்பர் 16-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்
.இது தொடர்பாக ஏப்ரல் 15-ம் தேதி உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அதை ஏற்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் விதியில் மாற்றம் கொண்டு வர ஒப்புக் கொண்டனர். ""எந்தவொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் மனித முயற்சியின் உயரிய அர்பணிப்புக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும்'' என்று விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விளையாட்டு வீரர்களும் இந்த விருதைப் பெறுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது என்று அஜய் மக்கான் தெரிவித்தார்.1954-ம் ஆண்டிலிருந்து பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு முறைப்படியாக எந்தவொரு பரிந்துரையும் செய்யப்படுவதில்லை. பிரதமர் முடிவெடுத்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைப்பார். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 3 பேருக்கு மட்டுமே இந்த விருதை வழங்க முடியும். குடியரசுத் தலைவரின் கையொப்பமிட்ட சான்றிதழும், பதக்கமும் வழங்கப்படும். இதுவரை 41 பேருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது. சர் சி.வி.ராமன், சி.வி.ராஜகோபாலாசாரி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் 1954-ம் ஆண்டு இந்த விருதை முதல் மூன்று இந்தியவர்கள் ஆவர். இந்திய குடிமகன்களுக்கு மட்டும்தான் இந்த விருதை வழங்க வேண்டும் என்று விதியில்லை. இந்திய பிரஜையாக மாறிய அன்னை தெரசாவும் (1980), இந்தியர்கள் அல்லாத கான் அப்துல் கபார் கான் மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990)இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு பண்டிட் பீம்சென் ஜோஷி இந்த விருதை கடைசியாகப் பெற்றார். தலைவர்கள் வரவேற்பு: டெண்டுல்கர் பாரத ரத்னா விருதை பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.மத்திய அமைச்சரும், பிசிசிஐயின் அலுவலருமான ராஜீவ் சுக்லா இதை நல்லதொரு மாற்றம் என்றார். இந்த விருதைப் பெற சச்சின் தகுதியுடையவராவார். அவருக்கு விருது வழங்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறேன். ஹாக்கி சாதனையாளர் மேஜர் தயான் சந்துக்கும் இறப்புக்கு பிந்தைய விருதாக இதை வழங்க வேண்டும் என்று சுக்லா தெரிவித்தார். சச்சின் பாரத ரத்னா விருதைப் பெற வேண்டும். இதன் மூலம் அந்த விருதும் பெருமையடையும் என்று பாஜக எம்.பி. பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லாவும், தினேஷ் திரிவேதியும் தயான் சந்துக்கு இந்த விருதை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக