சனி, டிசம்பர் 17, 2011

பிரதமர் அறிவிப்பால் அதிர்ச்சி: அடுத்த போராட்டத்துக்கு தயாராகும் கூடங்குளம் மக்கள்!

Kudankulamகூடங்குளம்: ரஷ்யா போன இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்தபடியே கூடங்குளம் அணுமின் நிலைய உற்பத்தி அடுத்த வாரம் தொடங்கும் என அறிவித்துள்ளது, அணுமின்நிலையத்துக்கு எதிரான போராட்டக்குவுவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தங்கள் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து இன்று கலந்தாலோசிக்கிறார்கள். 



கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்ட முதல் அணு உலை பணிகள் 99.2 சதவீதம் முடிந்துவிட்டன. இதுபோல் மற்றொரு யூனிட் பணிகளும் பெருமளவு முடிந்துவிட்டன. இதுவும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை கொண்டது. இந்த அணுஉலைகளால் மக்களுக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்பதால் மூட வலியுறுத்தி மக்கள் இடிந்தகரை கிராமத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் கூடங்குளம் அணு மின்நிலைய பணிகள் முடங்கியது. ஆகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த நிபுணர் குழுவினர் போராட்டக்காரர்கள் அடங்கிய மாநில குழுவுடன் 3 கட்டம் நடத்திய பேச்சு வார்த்தைகளும் தோல்வி அடைந்தன.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் 3 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அவரது பயணத்தின் போது கூடங்குளத்தில் கூடுதலாக அணு உலைகள் அமைப்பது தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகுமென தகவல் வெளியானது. எனவே பிரதமர் மன்மோகன்சிங்கின் ரஷ்யா பயணத்தை கண்டித்து இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் நேற்று கறுப்பு கொடி ஏற்றி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இடிந்தகரை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். கூடங்குளம், வைராவிகிணறு கிராம மக்கள் கடைகளை அடைத்து விட்டு உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். அணுமின் எதிர்ப்பாளர்கள் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்பு கொடி ஏற்றி இருந்தனர்.

மீனவர்கள் தங்கள் படகுகளில் கறுப்பு கொடி ஏற்றினர். ஏற்கனவே இடிந்த கரையில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் இருந்துவரும் தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்று 61-வது நாளை எட்டியுள்ள நிலையில், பிரதமரின் ரஷ்ய பயணத்தை கண்டித்து நேற்று தொடங்கிய 3 நாள் இரவும், பகலும் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் நாளை வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை ஓரிரு வாரங்களில் செயல்பட தொடங்குமென பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிவிப்பபு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த கட்ட தீவிரப் போராட்டத்துக்கு மக்கள் தயாராகிறார்கள். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டமும் இன்று நடக்கிறது. 

மக்கள் நலன் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்று, மேலும் மேலும் அணு உலை அமைக்க திட்டமிடும் மன்மோகன் சிங்கின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள்அனைவரும் திரண்டு வர வேண்டும் என போராட்டக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்தப் போராட்டம் நடக்க வேண்டும் என போராட்டக்குழு முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், "தமிழக மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிதான் இப்போது நடக்கிறது. பிரதமர் நம் உணர்வுகளை கொஞ்சமும் கருத்தில் கொள்ளவில்லை. இன்னும் இரண்டே வாரங்களில் அணு உலை தொடங்கும் என்று அவர் அறிவிக்கிறார் என்றால், ரகசியமாக அணு உலைப் பணிகள் நடந்துள்ளதாகத்தானே அர்த்தம்?," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக