டெல்லி: சமஜ்வாடியின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மத்திய அரசுப் பணிகளில் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பதவி உயர்வில் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி உறுதியாக இருந்தது. இந்த மசோதாவை நிறைவேற்றி தமது இழந்த வாக்கு வங்கியை மீட்க வேண்டும் என்பதற்காகவே சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசைக் காப்பாற்றினார் பமாயாவதி. ஆனால் இந்த மசோதாவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு தரக்கூடிய சமாஜ்வாடி. இதனால் மத்திய அரசு பெரும் குழப்பத்தில் சிக்கியது. ராஜ்யசபையை நடத்தவிடாமல் பகுஜன், சமாஜ்வாடி கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் உச்சமாகத்தான் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை நேற்று கடுமையாக விமர்சித்திருந்தார் மாயாவதி. இன்று அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந் நிலையில் இன்று பிற்பகலில் சமாஜ்வாடி கட்சியினரின் கடுமையான அமளிகளுக்கு இடையே இணை அமைச்சர் நாராயணசாமி, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த குரியனின் கடுமையான உத்தரவை மதிக்காமல் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்த சமாஜ்வாடி எம்.பி. அர்விந்த் குமார் வெளியேற்றப்பட்டார். இதேபோல் மற்றொரு சமாஜ்வாடி எம்.பியும் வெளியேற்றப்பட்டனர். மசோதா தாக்கலானது போது சமாஜ்வாடி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. முன்னதாக இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நேரில் சந்தித்து இம்மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. உ.பி.யில் ஸ்டிரைக்: இந் நிலையில் இம்மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாநிலத்தில் சுமார் 18 லட்சம் பிற்படுத்தப்பட்ட- மிகப் பிற்படுத்தப்பட்ட அரசுப் பணியாளர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக