டெல்லி: தலைநகர் டெல்லியில், ஓடும் பஸ்சில், ஒரு மாணவியை பலாத்காரம் செய்து அட்டூழியம் செய்துள்ளது ஒரு கும்பல். இதைத் தடுக்க முயன்ற மாணவியின் நண்பரை அக்கும்பல் அடித்துத் தூக்கி வெளியே வீசி விட்டது. தலைநகர் டெல்லியில் பெண்களின் கற்புக்கும், உயிருக்கும் சற்றும் பாதுகாப்பு இல்லை. இதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து அங்கு பாலியல் பலாத்காரங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு ஓடும் பஸ்சில், 23 வயது இளம் பெண்ணை ஐந்து பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதைத் தடுக்க முயன்ற அவரது நண்பரை அந்தக் கும்பல் அடித்து தூக்கி வெளியே வீசி விட்டது. பின்னர் அந்தப் பெண்ணை அரை நிர்வாண கோலத்தில் ஒரு பாலத்தில் வீசிச் சென்றுள்ளனர். அப்பெண் தற்போது அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண்ணின் நண்பர் கூறுகையில், இரவு 11 மணிக்கு முனிர்கா என்ற இடத்தில் ஒயிட்லைன் பேருந்தில் ஏறினோம். பாலம் செல்வதற்காக கிளம்பினோம். அந்தப் பேருந்து கிளம்பி பத்து நிமிடம் ஆன நிலையில், பஸ்சில் இருந்த சிலர் எனது தோழியிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினர். இதை நான் ஆட்சேபித்தேன். இதையடுத்து அவர்கள் என்னைத் தாக்கத் தொடங்கினர். பின்னர் என்னை தரதரவென இழுத்து பஸ்சை விட்டு கீழே தள்ளி விட்டனர். பின்னர் அந்தப் பெண்ணை பஸ்சின் கேபின் பகுதிக்கு இழுத்துச் சென்று அங்கு வைத்து 5 பேரும் பலாத்காரம் செய்து நாசப்படுத்தினர். பின்னர் அவரை அருகே உள்ள ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டனர் என்றார். சம்பந்தப்பட்ட பெண் டெல்லி பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருபவர். அவருடன் வந்த நபர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். படம் பார்த்து விட்டு இருவரும் வீடு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக