திங்கள், டிசம்பர் 10, 2012

கூடங்குளம்: நடுக்கடலில் முற்றுகைப் போராட்டம்! சாகவும் தயார்- சுப. உதயகுமார் !

இடிந்தகரை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடுக்கடலில் படகுகளில் நின்றபடி போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அணு உலையைத் தடுக்க சாகவும் தயார் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்திருக்கிறார். கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி
இன்று கடல்வழியாக மீண்டும் அணுஉலையை முற்றுகையிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.. இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இடிந்தகரை கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளுடன் கடல் வழியே அணு மின்நிலையத்தை முற்றுகையிட போராட்டக் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் நடுக்கடலில் நின்றபடி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
சாகவும் தயார்...: உதயகுமார்
போராட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்,
கூடங்குளம் அணு உலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்கவில்லை. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அணுக்கழிவை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஆனால் மத்திய அரசோ உரிய பதிலைத் தரவில்லை. கர்நாடகாவில் எந்த இடத்திலும் அணுக்கழிவை வைக்க அனுமதிக்கமாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அவர்களை மத்திய அரசு மதிக்கிறது. கர்நாடகாவில் அணுமின் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியதும் அத்திட்டம் கைவிடப்பட்டது.
தமிழர்களை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்துகிறது.
எங்களை தேசத்துரோகி எனக்கூறும் பா.ஜ.க.வினர், அணுமின்நிலையத்தை எதிர்க்கும் கர்நாடக முதல்வரை தேச துரோகி என்று கூறுவார்களா?.
தமிழக இயற்கை வளத்தை ரஷ்யாவிற்கு வழங்க அனுமதிக்கமாட்டோம். உயிரை கொடுத்தாவது இயற்கை வளத்தை காப்போம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து நாங்கள் சாகவும் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
பிற இடங்களில்...
இடிந்தகரை போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.
இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினர் மறியல் போராட்டம் நடத்தினர்
இன்றைய போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். போராட்டக் குழுவினர் அணுமின் நிலையத்துக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் அங்கு உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
கடந்த அக்டோபர் மாதமும் இதேபோல் நடுக்கடலில் நின்றபடி முற்றுகைப் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக