சினிமாவில், கடத்தல் குழுக்களிடையிலான மோதல்கள் இடம்பெறுவதை பார்த்திருப்பீர்கள். அவற்றை நேரில் பார்க்க வேண்டும் என்றால், நேரில் செல்ல வேண்டிய இடம், மெக்சிகோ. இங்கு போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் சொந்த ராட்சியங்களையே நடத்துகின்றனர். எதிர்க்
குழுக்களுக்கு மரண தண்டனை கொடுக்கின்றனர். கடத்தல் குழு தலைவர்கள், ராஜா போல மெய்ப்பாதுகாவலர் சகிதம் நடமாடுகின்றனர். சினிமாவை தூக்கிச் சாப்பிடக்கூடிய காட்சிகள் இவை. இந்த போட்டோ எஸ்ஸே, மெக்சிகோவில் கடத்தல் சாம்ராஜ்யம் எந்தளவுக்கு வேரூன்றி உள்ளது என்பதை காட்டுகிறது.
கடந்த 2006-ம் ஆண்டு மெக்சிகோவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பே கார்ல்டெரொன் பதவியேற்றபோது, நாட்டின் போதைப்பொருள் கடத்தல் குழுக்களை ஒழிப்பேன் என்றார். அதற்காக போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டது. கடத்தல் குழுக்களை ஒழித்தாரா?
இந்த மாதம் 1-ம் தேதியுடன் மெக்சிகோவுக்கு புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். ஆனால் பிலிப்பே கார்ல்டெரொனின், 6 வருட கால ஆட்சியில் 50,000 பேர் மெக்சிகோவில் போதைப் பொருள் தொடர்பான விவகாரங்களில் கொல்லப்பட்டுள்ள போதிலும், கடத்தல் சாம்ராஜ்யத்தை அசைக்க முடியவில்லை.
கீழே போட்டோவில் உள்ளது, மெக்சிகோ எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சுரங்கப்பாதை. இந்த சுரங்கப் பாதை எங்கே போய் முடிகிறது தெரியுமா? அமெரிக்காவில்! அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலம், Otay Mesaவில் உள்ள வேர்ஹவுஸ் ஒன்றில் போய் முடியும், இந்த சுரங்கப்பாதை, 750 மீட்டர் நீளமானது.
அமெரிக்க எல்லைக் காவல் படையின் செக் பாயின்ட் உள்ள இடத்துக்கு கீழே, நிலத்தடியே செல்லும் இந்தப் பாதை வழியாகவே, போதைப்பொருள், மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டு வந்தது.
கடந்த 2006-ம் ஆண்டு இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது, வேறு எங்காவது ஒரு இடத்தில் சுரங்கம் அமைத்திருப்பார்கள்!
மெக்சிகோ சிட்டி அருகே மடீரோ நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர், கடத்தல்காரர்களை கைது செய்த காட்சி. இரு கடத்தல் கோஷ்டிகளுக்கு இடையிலான மோதல் அடிக்கடி நடக்கும் இடம் இது. அத்துடன் பாதுகாப்புப் படையினருடன் கடத்தல்காரர்களின் துப்பாக்கிச் சண்டையும் நடக்கும்.
சண்டைகளின் உச்சக்கட்டமாக 2008-ம் ஆண்டு, சான் இக்னாசியோ என்ற இடத்தில், ஒரு கடத்தல் கோஷ்டியை சேர்ந்தவர்கள், மற்றைய கோஷ்டி உறுப்பினர்களையும், பாதுகாப்பு படையினரையும் கடத்திச் சென்று, கைகளை பின்புறமாக கட்டி, கொலை செய்த விஷயம் தெரிய வந்தபின், இந்த ரெயிடுகள் அதிகம் நடக்கின்றன. ஆனால், இதில் சிக்கும் ஆட்களில் அநேகர், கீழ்மட்ட உறுப்பினர்களே.
கீழேயுள்ள போட்டோவில் உள்ளதுதான், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சம்பவம். 2008-ம் ஆண்டு, சான் இக்னாசியோ என்ற இடத்தில், ஒரு கடத்தல் கோஷ்டியை சேர்ந்தவர்கள், மற்றைய கோஷ்டி உறுப்பினர்களையும், பாதுகாப்பு படையினரையும் கடத்திச் சென்று, கைகளை பின்புறமாக கட்டி, கொலை செய்த காட்சி இது.
டிசெம்பர் 2008-ல் நடைபெற்ற அந்த 13 கொலைகளில், சில பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிட்டோம் அல்லவா? கொல்லப்பட்ட 13 பேரில் 7 பேர், மெக்சிகோ ராணுவத்தை சேர்ந்தவர்கள். கீழேயுள்ள போட்டோவில், சில்பான்சின்கோ என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாமில், கொல்லப்பட்ட ராணுவத்தினரை ராணுவ மரியாதையுடன் தூக்கிச் செல்லும் சக ராணுவத்தினர்.
கீழேயுள்ள போட்டோவில் உள்ளது, போதைப்பொருள் டீலர் ஒருவருடைய உடல். திஜூவானா என்ற நகரில் தமது வீட்டுக்கு வெளியே சேரில் அமர்ந்திருந்த இவர், எதிர் கோஷ்டியினரால், தொலைவில் இருந்து குறிபார்த்து ஸ்னைப்பர் மூலம் சரியாக நெற்றியில் சுடப்பட்டார்.
சேரில் இருந்தபடியே அவரது உயிர் பிரிந்தது. சுவரில் தெறித்துள்ள ரத்தத்தை பாருங்கள்.
அபட்ஸின்கான் நகரில் ராணுவத்தினர் ரெயிடு செய்தபோது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், மற்றும் போதைப்பொருள் தயாரிப்புக்கான கெமிகல்களை ராணுவ வீரர் ஒருவர் காவல் காக்கும் காட்சி இது. உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து, இந்த நகரில் இருந்த வீடு ஒன்றில் இந்த ரெயிடு நடைபெற்றது.
இந்த ரெயிடின்போது, கடத்தல் குழுவின் முக்கிய புள்ளி ஒருவர் அகப்பட்டார். பிரான்சிஸ்கோ பெரஸ் என்ற பெயருடைய அவருக்கு, கடத்தல் வட்டாரங்களில் உள்ள பெயர், ‘ஓநாய்’.
ஜூவாரெஸ் நகரில், கடத்தல் குழுவைச் சேர்ந்த ஒருவர் வீதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள காட்சி இது. இந்த நபர் எந்திரத் துப்பாக்கியால் 9 தடவைகளை விட அதிக தோட்டாக்களால் சுடப்பட்டார். தரையில் சிதறி வீழ்ந்துள்ள 9 தோட்டாக்களும் எந்தெந்த இடத்தில் கிடந்தன என்பதை அடையாளம் வைக்கவே, மஞ்சள் நிற மாக்கர்கள் வைக்கப்பட்டுள்ளன.
அக்கபுல்கோ நகரில் உள்ள கோஸ்டா அசுல் ஹோட்டலில் வைத்து இது கடத்தல்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பியோட முயன்றபோது, இவர்களை சுட்டவர்கள் மெக்சிகோ கடற்படையினர். போட்டோவில், துப்பாக்கியுடன் நிற்பவர், இவர்களை சுட்டு வீழ்த்திய மெக்சிகோ கடற்படை டீமை சேர்ந்த வீரர் ஒருவர்.
கீழேயுள்ளது, திஜூவானா நகரில் எடுக்கப்பட்ட போட்டோ. போதைப் பொருள் தடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் செய்த ரெயிடில் சிக்கிய 105 டன் போதைப்பொருள், 10,000 பண்டல்களில் உள்ளதை காணலாம். இந்த பண்டல்களில், பிரபல கார்ட்டூன் கேரக்டர் Homer Simpson போட்டோ ஒட்டப்பட்டுள்ளது, பாதுகாப்பு படைகளை கிண்டல் அடிப்பதற்கு!!
கீழேயுள்ளது, திஜூவானா நகரில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றிய, Homer Simpson போட்டோ ஒட்டப்பட்ட 10,000 பண்டல்கள் மரிஜூவானா போதைப் பொருள் எரிக்கப்படும் காட்சி.
கடத்தல் குழு ஒன்றின் மறைவிடத்தை ரெயிடு பண்ணியபோது, குழு தலைவரின் பிரத்தியேக கைத்துப்பாக்கி கிடைத்தது. இந்த கைத்துப்பாக்கியில், போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவரின் படம் தங்க தகட்டில் பதிக்கப்பட்டுள்ளது.
அக்கபுல்கோ நகரில், போதைப் பொருள் கடத்தல் குழு ஒன்றின் உறுப்பினரை, இந்தக் குழுவின் போட்டிக் குழுவினர் கடத்திச் சென்று, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்துவிட்டு வீசிய காட்சி இது. கடந்த டிசம்பர் 2006-ல் இருந்து தற்போது வரை 6 வருடங்களில், 50,000 பேர் மெக்சிகோவில் போதைப் பொருள் தொடர்பான விவகாரங்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
மெக்சிகோ தலைநகரு மெக்சிகோ சிட்டியில், கடந்த மே மாதம் நடைபெற்ற மாபெரும் பேரணி. “இனி ரத்தம் வேண்டாம்” என்ற பொதுவான கோஷத்துடன் ஆயிரக் கணக்கான மெக்சிகோ மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். கடந்த 6 வருடங்களில், 50,000 பேர் மெக்சிகோவில் போதைப் பொருள் தொடர்பான விவகாரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குமேல் தாங்க முடியாது என்பதற்கே இந்த பேரணி.
நுவோ நியோ பகுதியில், போதைப்பொருள் குழு ஒன்றின் மறைவிடம் ரெயிடு செய்யப்பட்டபோது கிடைத்த பொருட்களையும், அங்கு கைது செய்யப்பட்ட நபரையும் செய்தியாளர் மாநாடு வைத்து காண்பித்தனர் போதைப் பொருள் தடுத்து சிறப்பு அதிரடிப்படையினர். அங்கு கைது செய்யப்பட்ட நபர், பின்புறமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் செய்தியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோ இது.
போதைப் பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினர் செய்த மற்றொரு ரெயிடின்பின் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், கடத்தல் குழு உறுப்பினர்களையும் கீழேயுள்ள போட்டோவில் காணலாம். மொரெலியா என்ற நகரில் நடைபெற்ற இந்த ரெயிடில் சிக்கியவர்கள், ‘Caballeros Templarios’ என்ற கடத்தல் குழுவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆகஸ்ட்டில், மொன்டரே நகரில் கொல்லப்பட்ட 54 பேருக்கு அவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அஞ்சலி செலுத்தும் காட்சி இது. ஸீடாஸ் என்ற கடத்தல் குழுவை சேர்ந்தவர்கள், தமது போட்டிக் குழுவினரை கொல்வதற்காக கேசினோ ராயல் நைட் கிளப்பில் கண்மூடித்தனமாக சுட்டபோது, 54 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
கீழேயுள்ள போட்டோவில் உள்ளவர், டாக்டர் மரியா சந்தோஷ் கொரோஸ்டிடா. 36 வயதான இவர், கடந்த மாதம் (நவம்பர்) போதைப் பொருள் கடத்தல் குழு ஒன்றால் கடத்திச் செல்லப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டார்.
போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் சமூக ஆர்வலரான இவர்மீது, இதற்கு முன்னரும் சில கொலை முயற்சித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. அவற்றில் இருந்து தப்பித்துக் கொண்ட இந்த டாக்டர், இறுதியில் கடந்த மாதம், கொல்லப்பட்டு விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக