அஹ்மதாபாத்:குஜராத் மாநிலத்தில் நடந்த முதல் கட்ட தேர்தலில் பழங்குடியினர் பகுதிகளில் அதிக அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன. இது காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 70.75 என்ற மாநில சராசரியை விட பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் வாக்குப்பதிவின் சதவீதம் அதிகமாகும். பழங்குடியினர் பகுதிகளில் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது சாதனையாகும். நர்மதா மாவட்டத்தில் ததியாபாடாவில் 88.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி
புதிய சாதனை படைத்துள்ளது. மோடி அலை வீசிய வந்த கடந்த தேர்தலில் 26 பழங்குடியினர் தொகுதிகளில் 14 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியிருந்தது. பா.ஜ.கவுக்கு 11 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஒரு இடமும் கிடைத்தன. மோடிக்கு ஆதரவான அலைகள் எதுவும் இல்லாத தற்போதைய தேர்தலில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. குஜராத்தில் முதல் கட்ட தேர்தலில் பழங்குடியினர் பகுதியில் உள்ள 27 தொகுதிகளில் 14 இடங்களில் வாக்குப்பதிவுகள் நடந்தன.
மீதமுள்ள தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 1998, 2002, 2007 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் மட்டுமே பழங்குடியினர் வாழும் பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. கடந்த தடவை 70.8 சதவீதம் வாக்குகள் பதிவாகின.1985-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் அமர்சிங் சவுதரி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலில் கூட 70 சதவீதத்தை இப்பகுதி எட்டவில்லை.
பழங்குடியினர் வாழும் பகுதிகளான ஜகாடியா, மாங்க்ரோல் தொகுதிகளில் முறையே 39.2 சதவீதம், 32.23 சதவீதம் ஆகிய குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகின. குஜராத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 1998-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 3 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு தபி மாவட்டத்தில் உள்ள வயாரா, நிஜ்ஹர் மண்டலங்கள் வெற்றியை அளித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக