திங்கள், டிசம்பர் 10, 2012

எகிப்து:கூடுதல் அதிகார உயர்வு உத்தரவை ரத்துச் செய்தார் முர்ஸி !

கெய்ரோ:தமது அதிகார வரம்பை உயர்த்தி பிறப்பித்த உத்தரவை எகிப்தின் அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி ரத்துச் செய்துள்ளார். அதேவேளையில் புதிய அரசியல் சாசன வரைவு மீது மக்களின் விருப்ப வாக்கெடுப்பு ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 15-ஆம் தேதி நடைபெறும். அதேவேளையில், முர்ஸி தனது உத்தரவை வாபஸ் பெற்றது போதுமான நடவடிக்கை அல்ல என்று கூறி நேசனல் சால்வேசன்
ஃப்ரண்ட் போன்ற அமைப்புகள் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்துள்ளன. அரசியல் சாசன அவையை கலைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உரியது என்ற உத்தரவை பிறப்பித்து கடந்த மாதம் 22-ஆம் தேதி முர்ஸி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அரசியல் சாசன அவையை நீதிமன்றங்கள் கலைப்பது புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவை பிறப்பித்ததாக முர்ஸி விளக்கம் அளித்தார். மேலும் புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வரும் வரை மட்டுமே தனக்கு இந்த அதிகாரம் இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால், எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எகிப்தில் இஸ்ரேல் குழப்பத்தை உருவாக்க முயலுகிறது என்ற செய்திகள் வெளியான சூழலில் எதிர்கட்சியினர் முர்ஸியின் உத்தரவை காரணம் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதிபர் தேர்தலில் முர்ஸியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அரபு லீக் பொதுச் செயலாளர் ஃபலஸ்தீன் ரமல்லாவில் வைத்து இஸ்ரேல் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சிபி லிவ்னியை சந்தித்துப் பேசிய பிறகே எகிப்தில் போராட்டம் தீவிரமடைந்தது. காஸ்ஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும்போது முர்ஸியின் கவனத்தை திசை திருப்ப எகிப்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று  சிபி லிவ்னி அம்ர் மூஸாவிடம் கேட்டுக்கொண்டார். இதனைக் குறித்து விசாரணை நடத்தக்கோரி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை அழைப்பு விடுத்த கூட்டத்தில் பல்வேறு எதிர்கட்சிகள் பங்கேற்றன. மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் தேதியை மாற்ற முர்ஸியால் இயலாது என்று கூட்டத்தில் பங்கேற்ற ஸலீம் அவா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக