தீவிரவாத வழக்குகளிலும், குண்டுவெடிப்புகளிலும் குற்றவாளிகளாக சித்தரித்து சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக சாதாரண ஆதாரங்கள் கூட இல்லை என்று கூறி நீதிமன்றங்கள் விடுதலைச் செய்யும் பொழுது போலீஸ் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகள் குறித்த சந்தேகம் வலுக்கிறது. டெல்லி லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்ட 2 கஷ்மீர் முஸ்லிம் இளைஞர்களுக்கு விதிக்கப்பட்ட
மரணத் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச்செய்தது. இதனைத் தொடர்ந்து போலீஸாரின் செயல்பாடுகள் குறித்த விவாதம் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. விசாரணை நீதிமன்றத்தால் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட முஹம்மது அலி மற்றும் மிர்ஸா நிஸார் ஆகியோரின் தண்டனையை கடந்த வாரம் டெல்லி உயர்நீதிமன்றம் ரத்துச் செய்து விடுதலைச்செய்தது. சாதாரண ஆதாரங்களை கூட தாக்கல் செய்யாத போலீசாரின் நடவடிக்கையை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
முஸ்லிம் சமுதாயத்தினரையும், பழங்குடி-தலித் சமூகத்தினரையும் பொய் வழக்குகளில் சிக்க வைத்து அரசு கொடுமை இழைப்பதாக சிறுபான்மை அமைப்பினரும், மனித உரிமை அமைப்புகளும் கூறிவரும் குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பதையே இச்சம்பவம் நிரூபிக்கிறது.
போலீஸ், ஊடகங்களால் பரபரப்பாக பரப்புரைச் செய்யப்பட்ட தீவிரவாத-குண்டுவெடிப்புகள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றங்கள் விடுவித்துள்ளன. இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டு டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு கைது செய்த ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் பல ஆண்டுகள் சிறையில் அநியாயமாக தங்களது வாழ்க்கையை பாழாக்கிய பிறகு நீதிமன்றங்களால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரவாத-குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆதாரங்களை ஆஜர்படுத்துவதில் போலீசாருக்கு ஏற்பட்ட தோல்வியே விசாரணை நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட நபர்களை உயர்நீதிமன்றங்கள் விடுவிக்க காரணம் என்று டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறுகிறார்.
மிகவும் இயந்திரத்தனமாக விசாரணை நீதிமன்றங்கள் தீவிரவாத வழக்குகளில் தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்ற வழக்கறிஞரான காமினி ஜெய்ஸ்வால் கூறுகிறார். பல வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவதில்லை. போலீஸின் கோரிக்கைகளை பரிசோதித்து ஆராயாமல் விசாரணை நீதிமன்ற நீதிபதிகள் பரிசீலிக்கின்றனர். இதன் மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கஸ்டடி நீளுகிறது என்று ஜெஸ்வால் கூறுகிறார். அதுமட்டுமல்ல, குற்றம் சாட்டப்பட்டோர் மீது சுமத்தும் பல்வேறு குற்றப்பிரிவுகளும் இன்னொரு முடிவை எடுப்பதில் இருந்து நீதிபதிகளை தடுப்பதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பால் நீதி ஜெயித்துள்ளது என்று மகிழ்ச்சி அடைந்தாலும், பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும் எதிர்காலத்தை குறித்து கவலை அடைந்துள்ளனர். 14-வது வயதில் லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மிர்ஸா நிஸார், தனது எதிர்காலத்தைக் குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளார். “நீதிமன்ற தீர்ப்புக் குறித்து மகிழ்ச்சியே! ஆனால்,தனது வாழ்க்கையின் முக்கியத்துவம் வாய்ந்த 16 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகு நிஸார், இனி என்னச் செய்வார்? ” என்று அவரது மாமா மிர்ஸா முஹம்மது ஹுஸைன் கேள்வி எழுப்புகிறார்.
மிர்ஸா முஹம்மது ஹுஸைன் போன்றோரின் கேள்விக்கு உரிய பதிலை ஆட்சியாளர்களால் அளிக்க முடியுமா? அல்லது மிர்ஸா நிஸார் போன்ற அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் தொலைத்த வாழ்க்கையை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்கத்தான் முடியுமா? எப்பொழுது இந்த துயரங்கள் முடிவுக்கு வரும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக