புதுடெல்லி:20 வருடங்கள் பழமையான கொலை வழக்கில் இருந்து பாகிஸ்தான் மைக்ரோலஜிஸ்ட் டாக்டர் முஹம்மது கலீல் ஜிஸ்தியை உச்ச நீதிமன்றம் குற்றமற்றவர் என்று விடுதலை செய்துள்ளது. கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் பாகிஸ்தானுக்கு செல்லவும் அவரை நீதிமன்றம் அனுமதித்துள்ளது. பாஸ்போர்ட் உள்பட அனைத்து ஆவணங்களையும் ஜிஸ்தியிடம் ஒப்படைக்க நீதிபதிகளான பி.சதாசிவம், ரஞ்சன் கோகோய் ஆகியோர்
அடங்கிய பெஞ்ச் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 82 வயதான டாக்டர் கலீல் ஜிஸ்தியின் வயது மற்றும் கல்வியை கருத்தில் கொண்டு பெஞ்ச், அவரது பாகிஸ்தான் பயணத்தை எளிதாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் கிடைப்பதற்காக நீதிமன்றத்தில் செலுத்திய 5 லட்சம் ரூபாயை ஜிஸ்தி அல்லது அவரது மனுதாரருக்கு அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இதர நபர்களையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை என்றும், அரசு தரப்பு ஆஜர்படுத்திய ஆதாரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
18 ஆண்டுகள் விசாரணக்குப் பிறகு ஜிஸ்திக்கு கடந்த ஆண்டு விசாரணை நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வாண்டு ஏப்ரல் ஒன்பதாம் தேதி உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் அனுமதித்தது. அடுத்த உத்தரவு வரும் வரை அஜ்மீரை விட்டு செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
அஜ்மீரில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஜிஸ்தி, 1992-ஆம் ஆண்டு தனது தாயாரை காண அஜ்மீருக்கு வந்தார். அப்பொழுது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஜிஸ்தி குற்றவாளியாக்கப்பட்டார்.
மனித நேயத்தின் அடிப்படையில் ஜிஸ்தியை விடுதலை செய்ய வேண்டும் என்று அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஊடகங்களில் ஜிஸ்தி குறித்த செய்திகள் வெளியாகின.
கராச்சி மெடிக்கல் காலேஜில் பேராசிரியரான ஜிஸ்தி, எடின்பர்க் பல்கலைக்கழத்தில் இருந்து பி.ஹெஸ்.டி பட்டம் பெற்றவர். நாடு பிரிவினையின் போது பாகிஸ்தானில் படித்துக் கொண்டிருந்த ஜிஸ்தி, பின்னர் அங்கேயே தங்கிவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக