சனி, டிசம்பர் 03, 2011

அளவான ஜனநாயகமே இந்தியாவிற்கு தேவை - மகாதிர் முஹம்மது


இந்தியாவிற்கு அளவான ஜனநாயக அரசியலே தேவை, அதிகபடியான ஜனநாயகம் நாட்டின் வளர்ச்சிக்கு தடைகல்லாக இருக்குமென மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதிர் முஹம்மது கருத்து தெரிவித்தார். வருடாந்திர ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைவர்கள் கருத்தரங்கில் பேசிய அவர், அதிகப்படியான ஜனநாயகம் உள்ள அரசியல் அமைப்பில் முடிவுகளை எடுப்பது சிரமம் என்றும், தற்போது நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு ஒரு உதாரணம் என குறிப்பிட்டார். அளவான ஜனநாயகம் இந்தியாவிற்கு அரசியல் ரீதியாக அமைந்து இருந்தால், இந்தியா எப்போதோ
சீனாவை முந்தியிருக்க முடியும் என்றார்.


ஜனநாயகம் என்பது நல்ல அமைப்பு தான், ஆனால் எந்த அளவிற்கு நாம் அதனை பயன்படுத்த வேண்டுமென்பதில் கவனமாக இருக்க வேண்டுமென குறிபிட்ட அவர், சிங்கப்பூர் இதற்கு நல்ல உதாரணம் என்றார். அளவான ஜனநாயகம் இருப்பதால் நாட்டின் வளர்ச்சி குறித்த முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகின்றன என்றார். சுமார் 22 ஆண்டு காலம் மலேசிய நாட்டின் பிரதமராக பதவி வகித்த திரு மகாதிர், மலேசிய நாட்டை, ஆசியாவின் முக்கிய வர்த்தக நாடாக மாற்றி நாட்டின் வளர்ச்சியை அதிகரித்தவர். இவருடைய பதவி காலத்தில் நாட்டிற்கு தேவையான முடிவுகள் பல தன்னிச்சையாக எடுக்கபட்டு இருக்கின்றன. மேலும் அமெரிக்க, ஆஸ்திரேலிய நாடுகளின் ஆசிய விரோத போக்கை அடிக்கடி சுட்டிக் காட்டி அந்நாட்டு அதிபர்களின் அதிருப்திக்கு ஆளானவர் என்ற முத்திரையும் இவருக்குண்டு.


பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஏதேனும் ஆலோசனை கூறுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டாக்டர் மகாதிர், பிரதமர் மன்மோகன் சிங், தான் நம்பும் கொள்கைகளை தீவிரமாக அமுல்படுத்த வேண்டுமென்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக