சனி, டிசம்பர் 10, 2011

பசுமையின் தாய் பேராசிரியை வங்கரி மாதாய்!


பசுமையின் தாய் பேராசிரியை வங்கரி மாதாய்!சமையலையும் சீரியலையும் விட்டால் பெண்களுக்கு வேறு கதியே இல்லை என்று கருதும் துர்ப்பாக்கியம் தமிழ்ப் பெண்களைவிட்டு நீங்கி வாழ்வில் புதுமை புனையவும் புவனம் பயனுற வாழவும் வேண்டுமெனில், தம்மை ஒத்த மாதர்கள் இந்த உலகில் சாதனைப் பெண்களாய் வாழ்ந்த சரித்திரத்தை அவர்கள் படிக்க
வேண்டும்; தாமும் புது சரித்திரம் படைக்க முன்வரவேண்டும்.
அந்த வகையில், இருண்ட கண்டம் என்றும் மிகப் பின்தங்கிய பிராந்தியம் எனவும் பெயர்பெற்ற ஆபிரிக்கக் கண்டத்திற்கே பசுமையின் உயிர்ப்பைத் துளிர்க்கச் செய்து சாதனை மங்கையாய் வாழ்ந்து மறைந்த ஒரு பெண்மணியைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.  

அவரின் முழுப் பெயர் வங்கரி முட்டா மேரி ஜோ மாதாய்.  1940 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி கென்யாவின் நைரி மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமத்தில் அவர் பிறந்தார்.

எத்தனையோ இன்னல்களோடு தன்னுடைய கல்வியைத் தொடர்ந்த அவர், 1964-ல் உயிரியல் விஞ்ஞானத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1966 ஆம் ஆண்டில் பிட்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அத்துடன் அவர் தன்னுடைய கல்விப் பயணத்தை இடைநிறுத்தவில்லை.  1971 ஆம் ஆண்டு நைரோபி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். கிழக்காபிரிக்க மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் முதலாவதாகக் கலாநிதிப் பட்டம்பெற்ற பெண்மணி என்ற பெருமையைத் தனதாக்கிக்கொண்டார்.  

உதவி விரிவுரையாளராய் பணியாற்றத் தொடங்கிய மாதாய், 1976-77 ஆம் ஆண்டுகளில் நைரோபி பல்கலைக்கழகத்தில் விலங்கியல்துறைத் தலைவராகவும்  அதேதுறையில் இணைப் பேராசிரியையாகவும் பணியுயர்வு பெற்றார். அப்பிராந்தியத்திலேயே மேற்படி பதவிகளை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும்.
1976 முதல் கென்யாவின் பெண்கள் தேசியக் கவுன்ஸிலின் துடிப்புமிக்க செயற்பாட்டாளராக விளங்கிய பேராசிரியை வங்கரி மாதாய், 1981-1987 காலப் பகுதிகளில் அதன் தலைவியாகவும் பணியாற்றியுள்ளார். 1976 ஆம் ஆண்டு முதல் இவர் அறிமுகப்படுத்திய மரநடுகை இயக்கம் காலப்போக்கில் பேரியக்கமாய் வியாபிக்கத் தொடங்கியது. "பச்சை நாடா இயக்கம்" ஒன்றை ஸ்தாபித்த வங்கரி மாதாய் பண்ணைகள், பாடசாலைகள், சர்ச்சுகள் என்பவற்றில் அதிகளவான மரங்களை நடுவதற்கு பெண்கள் மத்தியில் ஆர்வமூட்டினார். இதன் விளைவாக இப்பிராந்தியமெங்கிலும் வாழும் பெண்களால் 20 மில்லியன் மரங்கள் நடப்பட்டன.  இவ்வாறு தொடங்கப்பெற்ற இவரது பச்சை நாடா இயக்கம் காலப்போக்கில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுக்கொண்டமையும், 1986 இன் பின்னர் இத்திட்டம் தன்ஸானியா, உகண்டா, மாலாவி, எத்தியோப்பியா, ஸிம்பாப்வே என ஆபிரிக்கக் கண்டத்தின் ஏனைய நாடுகளிலும் விஸ்தரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வங்கரி மாதாய் தனது பிராந்தியத்தில் இடம்பெற்று வந்த நில அபகரிப்பு, காடழிப்பு என்பனவற்றுக்கு எதிராகவும் குரல் எழுப்பிவந்தார். ஜனநாயகம், மனித உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பனவற்றை நிலைநிறுத்தும் வகையில் அவர் அயராது பாடுபட்டு வந்தார்.  அதன் மூலம் உலகத்தின் கவனம் அவர்பால் திரும்பியது.

"பெண்ணாகப் பிறந்துவிட்ட என்னால் என்னதான் சாதித்துவிட முடியும்?" என்பது போன்ற பிற்போக்கான எண்ணங்கள் வங்கரி மாதாயின் அகராதியில் கிடையாது. தன் உயிர் மூச்சு உள்ளவரை சாதிப்பது ஒன்றே தன் லட்சியம் என்று இடையறாது பாடுபட்ட அவரை நாடி எண்ணற்ற விருதுகள் வந்து குவிந்தன. அவ்வாறு தானாகவே வந்து அவரின் வாயில் கதவைத் தட்டிய விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:

* The Woman of the Year Award (1983)
* Right Livelihood Award (1984)
* Better World Society Award (1986)
* Windstar Award for the Environment (1988)
* The Woman of the World (1989)
* Goldman Environmental Prize (1991)
* The Hunger Project's Africa Prize for Leadership (1991)
* Edinburgh Medal (1993)
* Jane Adams Leadership Award (1993)
* Golden Ark Award (1994)
* Juliet Hollister Award (2001)
* Excellence Award from the Kenyan Community Abroad (2001)
* Outstanding Vision and Commitment Award (2002)
* WANGO Environment Award (2003)
* The Sophie Prize (2004)
* The Petra Kelly Prize for Environment (2004)
* The Conservation Scientist Award (2004)
* J. Sterling Morton Award (2004)

இந்த அனைத்து விருதுகளுக்கும் சிகரம் வைத்தாற்போல் 2004 ஆம் ஆண்டு மனிதாபிமானச் செயற்பாடுகளுக்காய் சமாதானத்துக்கான நோபல் பரிசையும் தன் கையப்படுத்திப் பெண்குலத்துக்கே பெருமை தேடித் தந்தார். இவரது பணிகளை கௌரவிக்குமுகமாக நோர்வே பல்கலைக்கழகம், யாலே பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியை வங்கரி மாதாய் அவர்களின் அளப்பரும் பணிகள் குறித்துப் பலரும் எழுதியுள்ளனர். அந்த வகையில்,

* Land Ist Leben (Bedrohte Volker, 1993)
* Una Sola Terra: Donna I Medi Ambient Despres de Rio (Brice Lalonde et al., 1998)
* Women Pioneers for the Environment (Mary Joy Breton, 1998)
* Speak Truth to Power (Kerry Kennedy Cuomo, 2000)
* Hopes Edge: The Next Diet for a Small Planet (Frances Moore Lappé and Anna Lappé, 2002)
* Belt Movement and Professor Wangari Maathai are featured in several publications including The Green Belt Movement: Sharing the Approach (by Professor Wangari Maathai, 2002)
முதலான நூல்கள் அவரது சேவைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கியுள்ளன.
பேராசிரியை மாதாய் அவர்கள் படைவலிமைக் குறைப்பு தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆலோசனைக்குழு, பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் அபிவிருத்தி அமையம் முதலான பல்வேறு நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளார். 2002 ஆம் ஆண்டு கென்யாவில் இடம்பெற்ற தேர்தலில் அமோக வாக்குகளின் அடிப்படையில் வெற்றிபெற்ற பேராசிரியை மாதாய், சுற்றுச் சூழல், வனத்துறை மற்றும் இயற்கைவள உதவி அமைச்சராகப் பதவியேற்றார்.

உலகின் சுபிட்சத்துக்காயும் பெண்களின் முன்னேற்றத்துக்காயும் அயராது பணியாற்றிய அவர், 2011 ஆம் ஆண்டு தம் பணியில் இருந்து நிரந்தரமாய் ஓய்வு பெற்றார். ஆம், கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பேராசிரியை வங்கரி மாதாய் 25 செப்டம்பர் 2011 அன்று நைரோபி வைத்தியசாலையில் உயிர் நீத்தார். ஒரு சாதாரணக் கிராமத்தில் பிறந்து தன் விடாமுயற்சியாலும் மனத் துணிவாலும் மனிதாபிமானச் செயற்பாடுகளாலும் சாதனைப் பெண்ணாய் வாழ்ந்து மறைந்த பேராசிரியை வங்கரி மாதாயின் புகழ் உலகுள்ள வரை நிலைபெறும் என்பதில் ஐயமில்லை அல்லவா?

ஆக்கம்: தமிழினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக