ஞாயிறு, டிசம்பர் 18, 2011

சீனாவை நம்மால் ஜெயிக்க முடியுமா?



உலகின் பல நாடுகள்  பொறுளாதார நெருக்கடியில் திணறிக் கொண்டிருக்கும்போது இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து முன்னேற்க் கொண்டிருக்கின்றன். முரண்பாடான் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட இந்த இரு நாடுகளில் ஜெயிக்கப் போவது யார்? ண்ணத் திரையில் ஏழாம் அறிவை விசிலடித்து, கைதட்டி குதூகலித்துக் கொண்டிருந்த தமிழர்கள் இரு வாரங்களுக்குமுன் (நவம்பர் 25) உலக அரங்கைத் திடுக்கிட வைத்த இந்தச் செய்தியைக் கவனிக்கத் தவறியிருந்திருக்கலாம். சீனாவின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகிறது இந்தியா, தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறது என்கிறது செய்தி. ஆசியாவில், குறிப்பாக
தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் சீனாவின் கௌரவம் உயர்ந்து வருவது கண்டு நடுங்குகிறது இந்தியா. அண்மைக் காலமாக இந்த வட்டாரத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை, தான் சுற்றி வளைக்கப்படுவதாகவும் கட்டுக்குள் வைக்கப்படுவதாகவும் கருதுகிறது இந்தியா என்று விரிந்து கொண்டுபோகிறது அந்தக் கட்டுரை. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தச் செய்தியை வெளியிட்டிருப்பது சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா.

இந்தச் செய்தி வெளியாவதற்கு சில நாட்களுக்குமுன் அக்டோபர் 11ம் தேதி, சீன ராணுவத்தினருக்கான தினசரியான ‘மக்கள் விடுதலைப்படை தினசரி’, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தினசரியான ‘குளோபல் டைம்ஸ்’ இரண்டின் தலையங்கங்களும் இந்தியாவைக் கடுமையாகச் சாடியிருந்தன.
இன்னொருபுறம் உலகப் புகழ் பெற்ற வார இதழான, ‘டைம்’ அதன் நவம்பர் 21ம் தேதி இதழின் கவர் ஸ்டோரியாக சீனா Vs இந்தியா, ‘இனிவரும் ஆண்டுகளில் உலகை ஆளப்போவது யார்?’ என்ற கட்டுரையை வெளியிட்டிருந்தது.

சீனா சொல்வதுபோல நமக்குப் பொறாமையா? தாழ்வு மனப் பான்மையா அல்லது அமெரிக்கர்கள் கணிப்பதுபோல நாம் உலகிற்கு ஓர் உதாரணமாகத் திகழப் போகிறோமா? நம்மால் சீனாவை முந்த முடியுமா? உண்மை நிலை என்ன?

அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.  ஐரோப்பிய நாடுகள் பல இன்று நிதி நெருக்கடியைச் சந்தித்துக்கொண்டு இருக்கின்றன. உலகெங்கும் பணப் புழக்கம் மந்தமாக இருக்கிறது. பல மேற்கத்திய நாடுகளில் பங்குச் சந்தை வீழ்ச்சி, உற்பத்தித் தேக்கம், வேலையில்லா திண்டாட்டம் என்று பலவிதங்களில் அங்குள்ள அரசுகள் ஆட்டம் காணும்போது, சீனாவும் இந்தியாவும் இவை எவற்றாலும் பாதிக்கப்படாமல், பொதுவாக 7 சதவிகிதம், 9 சதவிகிதம் என்று நல்ல வளர்ச்சி காண்பிப்பதால் மற்ற நாடுகள் வியப்புடனும் திகைப்புடனும்  நம்மைத் திரும்பிப் பார்க்கின்றன.

இந்த இரண்டு நாடுகள்தான் இனி உலகில் முன்னணி வகிக்குமோ என்று உலக நாடுகள் மூக்கில் விரலை வைக்கின்றன. அதே சமயம் இந்த இரண்டில் எது, என்றும் யோசிக்க ஆரம்பித்திருக்கின்றன. ஏனெனில், இந்த இரண்டு நாடுகளுமே பொருளாதாரத்தில் முரணான கொள்கையுடையவை; அரசியலில் இவை எலியும் பூனையும்; ஆனால், இரு நாடுகளுமே உலகின் இதர பொருளாதார சலசலப்பில் பாதிக்கப்படவில்லை. அதற்கு காரணம் என்ன? பலவிதங்களில் முரண்படும் இந்த இரு நாடுகளில் எது பல ஆண்டுகளுக்குப் பின்பும் செழித்து நின்று நிலைக்கும்? இரு நாடுகளில் எந்த நாட்டின் முன் உதாரணம் மற்ற நாடுகளுக்கு பின்பற்றக்கூடியதாக இருக்கும்?
இன்று உலக நாடுகளிடையே இந்தக் கேள்விகள் எழுந்து, அவை விடை தேடிக்கொண்டிருக்கின்றன.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. இரு பக்கங்களும் உண்மையே. இரு நாடுகளின்  வழிமுறைகளிலும் ஆக்கமும் எதிர் நீச்சலும் உள்ளன.
ஷாங்காய் நகரின் சுத்தமான, அகலமான சாலைகளையும் பிரமிப்பூட்டும் கட்டிடங்களையும் பார்த்த எவருக்கும் உலகிலேயே அசுத்தமான நாடு இந்தியாதான் என்ற ஜெயராம் ரமேஷின் கருத்து ஆச்சரியமளிக்காது. அது சற்று மிகையான கருத்துதான்; ஆனால், அதில் ஓரளவு உண்மையில்லாமலும் இல்லை. மேலோட்டமாகப் பார்த்தால், இந்திய நகர்ப்புறங்களின் நிலை அதுதான். நமது மருத்துவமனைகள் இருக்கும் நிலையைப் பார்க்கும் எவருக்கும் சுத்தமும் சுகாதாரமும் நமது அகராதியிலேயே இல்லையோ என்ற சந்தேகம் வரலாம்.
ஆனால், இங்கேதான் சீனா போன்ற நாடுகளுக்கும் நமக்கும் உள்ள முதல் வித்தியாசம். இந்தியாவில் எல்லாமே வெளிப்படை. வளர்ச்சியும் வளர்ச்சியில்லா நிலையும் பணமுள்ளவர்களும் பணமில்லாதவர்களும் அரசியல் குழப்பங்களும் வாக்காளர்களின் தெளிவுகளும் எல்லாமே வெளிப்படை. திறந்த புத்தகம் என்பதுபோல் இங்கே  எதுவுமே ஒளிவு, மறைவு கிடையாது. இந்தியா ஒரு ஓப்பன் புத்தகம்.  குற்றங்கள் புரிந்தவர்களும் நாட்டின் அடிமட்ட மக்களுக்காக சத்தமில்லாமல் சேவை செய்யும் தங்கமான மனிதர்களும் ஒரே பத்திரிகையின் ஒரே பக்க செய்தியில் இடம் பெறுவார்கள். நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் வாழ்க்கைமுறை நமக்கு பழகிப்போன ஒன்று.

இதற்கு நமது ஜனநாயகம் ஒரு முக்கியக் காரணம். ஒளிவு, மறைவு இன்றி எல்லாமே வெளிப்படையாக செயல்படும் எந்த ஆட்சி முறையிலும் குழப்பங்கள் இருந்தாலும், வளர்ச்சி நிச்சயம் இருக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
சீனாவிலோ இணையத்தைக் கட்டுப்படுத்துவது, வெளிப்படையான விவாதங்கள் அனுமதிக்கப்படாமை, தனி மனித உரிமைகள் பறிக்கப்படுவது போன்ற ஒடுக்கும் செயல்களால் தனி மனிதத் திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன. இது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு  ஏதுவானதல்ல என்பதும்  இந்த ஆய்வாளர்கள் கருத்து.

நமது ஜனநாயக முறையினால், தனியார் துறையும் தனிப்பட்ட தொழில்முனையோரும் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பதோடல்லாமல், அவர்களின் திறமை, வளர்ந்த நாடுகளின் தொழில் மற்றும் நிர்வாகத் திறமைக்கு ஒப்பானது என்று பல நிர்வாக வல்லுநர்கள் கூறுகின்றனர். எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு இந்தியர்களின் இந்த நிர்வாகத் திறமை ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் என்பது இவர்கள் கருத்து.

உலகளவில் பலவித நிர்வாகிகளுடனும் தொழில் முனைவர்களுக்கு  நிகராகவும் போட்டியிடும் திறமை இந்தியர்களுக்கு உண்டு. இதற்கு முக்கியக் காரணம் நமது டாடா, பிர்லா போன்றோர் பல வருடங்கள் முன்பே, கடல் கடந்து தங்கள் நிறுவனங்களை வளர்த்து, பல வெளிநாட்டு நிர்வாக அனுபவம்  பெற்றவர்கள்.  அத்துடன் இன்று, தகவல் தொடர்பு போன்ற புதிய துறைகளின் மன்னர்களான இன்போசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் புதிய பல உத்திகளுடன் வியாபார நுணுக்கங்களை தங்கள் துறைகளில் புகுத்தியது மூலம், பல ஆக்கப்பூர்வமான தொழில்நுட்பத் திறமைகளை - தொழிலாளர்களை வளர்த்துள்ளார்கள்.  மாறிக்கொண்டே இருக்கும் எதிர்காலத்தில் உலக நாடுகள் முன்னேற, அதிக தொழில்நுட்ப சக்தியும் புதுவித நூதனத் தொழில் துறை மாற்றங்களும் அவசியம். இந்த விதத்தில் இந்தியாவின் தனியார் துறை இன்று முன்னோடியாக விளங்குகிறது. தொழில் துறை, உலகளவில் சவால்களை சந்திக்க நேரிடும்போது இவர்களின் இந்தத் திறமைகள் கைகொடுக்கும் என்பது இந்தியாவை ஆதரிக்கும்  ஆய்வாளர்களின் கருத்து.

இந்தியாவின் தொழில் நிறுவனங்கள் சீனாவின் நிறுவனங்களைவிட சக்தி வாய்ந்தவை; திறமையானவை என்பது மற்றொரு கருத்து. சீன நிறுவனங்கள் பல இன்று அதிகக் கடனில் ஓடிக்கொண்டிருக்கின்றன. சீன நிறுவனங்களின் மொத்தக் கடன் தொகை, அந்நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் (Representation of GDP) 139 சதவிகிதம். இதுவே, இந்திய நிறுவங்களை ஒப்பிட்டால் நமது நிறுவனங்களின் மொத்தக் கடன்,  நமது GDP பங்கீட்டில் வெறும் 49 சதவிகிதம் மட்டுமே. அதிகக் கடன் சிக்கலை விளைவிக்கும் என்பது நிதித்துறையின் பாலபாடம். இந்தக் கோணத்தில் இந்திய நிறுவனங்கள் வலிமையானவை.

ஜனநாயகம், தனியார் துறை வளர்ச்சி தவிர இந்தியாவிற்குச் சாதகமாக வேறு சில அம்சங்களும் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை, நமது நீதித்துறையும் நமது வங்கி மற்றும் நிதித்துறையும்.

இந்தியாவின் நிதித்துறை சீனாவை விட மிக வலிமை வாய்ந்தது என்று சிங்கப்பூரில் உள்ள ஒரு மதிப்பீடு நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்நாட்டின் நிதித்துறைக்கும் வங்கிகளுக்கும் வலிமையான தொடர்பு உள்ளது.

நமது நீதித்துறை மிக வலிமையானதாகவும் எல்லாவற்றிலும் ஒழுங்கு முறை சட்டம் போன்றவை சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணிப்பதாலும்  பொருளாதார வளர்ச்சி நிதானமாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் வளருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இவை எல்லாவற்றையும் விட, இந்தியாவின்மேல் நம்பிக்கை வைக்கும் ஆதரவாளர்களின் ஆணித்தரமான நம்பிக்கைக்கு அடிப்படை உலக  சரித்திரம். உலக வரலாற்றில் எங்குமே சர்வாதிகார அல்லது எதேச்சதிகார நாடுகள் தொடர்ந்து வளர்ச்சியடைந்ததாகவோ அல்லது நூதனமான தொழில்களையும் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவியதாகவோ அல்லது புதிய கண்டுபிடிப்புகளை உலகிற்கு கொடுத்ததாகவோ சரித்திரமே கிடையாது. ஆகையால் உண்மையான, நிலையான வளர்ச்சிக்கு வெளிப்படையான, சுதந்திரமான ஜனநாயகம்தான் ஒரே வழி. இன்று ஷாங்காய் நகரின் பளபளக்கும் சாலைகளும் கட்டிடங்களும் பிரமிப்பூட்டலாம். ஆனால், காலப்போக்கில் நாளை என்பது ஜனநாயக இந்தியாதான் என்பது இவர்கள் கருத்து.

எல்லாம் சரிதான்... ஆனாலும் வளர்ச்சி ரேசில் நாம் எங்கே கோட்டை விடுகிறோம்? நமது அரசு நிர்வாகத்துறை திறமை வாய்ந்தது. ஆனால், மிக மிக வேகம் குறைந்தது. முடிவுகள் எடுப்பதில் மித மிஞ்சிய காலதாமதம். சில சமயங்களில் அரசு நிர்வாகம் சுத்தமாக நின்றுவிட்டதோ என்னும் அளவு செயலின்மை, மிகப் பரிதாபமான நிலையில் இருக்கும் உள்கட்டுமானத் துறை (Infrastructure).

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீகுவான்யூ சிங்கப்பூரை ஆரம்பத்தில் நிர்வகிக்கும்போது கூறினார்: ‘சிங்கப்பூரின் கட்டுமானத்துறையை முதலில் உலக முதல் தரமானதாக மாற்றுவேன். அப்போதுதான் உலகின் முதல்தர நாடுகள் இங்கு வந்து முதலீடு செய்வார்கள்’ என்று சிங்கப்பூரின் வளர்ச்சியை திட்டமிட்டு செய்தார். சீனாவிலும் இதே நிலைதான். பார்க்கும் முதல் பார்வையில் ஒரு நாட்டின் வளர்ச்சி தெரிய வேண்டும் என்பது இதன் பின்னுள்ள  அடிப்படை.

இந்த விதத்தில்  இந்தியா செல்ல வேண்டிய தூரம் இன்னும் மிக அதிகம். என்னதான் நமது ஜனநாயகம், நீதித்துறை என்று பல வலிமைகள் இருந்தாலும் நாம் விரைவில் சீனாவை தள்ளிக்கொண்டு வல்லரசாகி விடுவோம் என்று மெத்தனமாகக் கனவு காண முடியாது. நமது குறைகளைக் களைந்து எங்கே சரிசெய்ய வேண்டுமோ, அங்கே சரி செய்து விழிப்பாக இருப்பது அவசியம்.

சீனாவின் குறைகளையும் அந்த நாடு விரைவில் சரி செய்துகொண்டு இருக்கிறது என்பதும் உண்மை. தனியார்துறை வளர்ச்சியிலும் உற்பத்தித் துறையிலும் அது இன்று  பல மடங்கு முன்னேறியுள்ளது. வலுவான அரசு நிர்வாகம், என்னதான் எதேச்சதிகாரம் என்றாலும் தேவையான திறமைகளை ஊக்குவித்து செயல் முனைப்பையும் காட்டுகிறது. அந்தச் செயல் முனைப்பும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம்.

இந்தியா, சீனா இரண்டு நாடுகளிலும் இருக்கும் மற்றொரு ஒப்பீடு  மக்கள் தொகை.
சீனாவின் ஒரு குடும்பத்திற்கு ஒரே குழந்தை என்ற கொள்கையால் அங்கே வருங்காலத்தில் வயதானவர்கள் தொகை அதிகரித்து, இளைஞர்கள்  தொகை குறையும். இது அவர்கள் வளர்ச்சியைப் பாதிக்கும். ஆனால், இந்தியாவில் இளைஞர்கள் தொகை அதிகமாக இருக்கும் நாட்டின் வளர்ச்சிக்கு இது ஆதாயமாகும்  என்பது ஒரு கருத்து. ஆனால், இந்தியாவில் சரியான கல்வி இல்லாதபோது இந்த இளைஞர்கள் தொகையினால் கேடுகளே அதிகமாகும்  என்பது  இதன் மாற்றுக் கருத்து. இதிலும்  உண்மை உள்ளது என்பதை மறுக்க முடியாது.

அதனால் இந்தியா, தன் கல்வித்துறை மற்றும் தனிமனித அடிப்படைத் தேவைகளை (சுத்தம், சுகாதாரம், கல்வி, உணவு, இருப்பிடம் போன்றவை) கிடைக்க வழிவகைகளை  செய்தபின் வல்லரசாகும் கனவை நிச்சயமாக  நிஜமாக்க முடியும். நமது அடிப்படைகள் வலுவானவை. இன்னும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வரும்போது நமது வெற்றிக்கு வானமே எல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக