பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால், பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு கோர்ட்டில் சொல்லிய கையோடு, சுறுசுறு நடவடிக்கையில் இறங்கிவிட்டது. பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.தமிழகம் முழுவதும் போலீசார் இன்று சோதனை நடத்தினர். சென்னையில் மட்டும் 500 மாணவர்கள் பிடிபட்டனர்.
முதல் நாள் என்பதால் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.சென்னை பெருங்குடியில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தபோதே, தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தால், பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது.அப்போது போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனரின் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். “பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்” என்று அப்போது அவர் தெரிவித்திருந்தார். வழக்கு பதிவு செய்ய, பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்பவர்களை பிடிக்க வேண்டும் அல்லவா?அதற்காகவே, போலீஸ் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளது.இன்று வீதிச் சோதனைகளில் இறக்கி விடப்பட்ட போலீஸார், பஸ் படிகளில் நின்று பயணம் செய்தவர்களை பிடித்து எச்சரித்தனர். அவர்களை இறக்கிவிட்டு, அடுத்த பஸ்சில் ஏற்றி அனுப்பினர். பஸ் நிறுத்தங்களில் போலீசார் மறைந்து நின்று கண்காணிக்கின்றனர். அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் டிரைவர், கண்டக்டர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.தானியங்கி கதவுகளை மூடாத பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வெவ்வேறு நகரங்களில் போலீஸார், படிக்கட்டில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களை வீடியோ கேமராவிலும் படம் பிடித்து வருகின்றனர். மதுரை, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் வீதி சோதனைகளை நடத்தினர்.கோவையில் படிக்கட்டில் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் கண்டக்டர்கள் 11 பேர் மற்றும் தனியார் பஸ் கண்டக்டர்கள் 30 பேர், அளவுக்குஅதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்ற 70க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் சிக்கினர். அவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டது.தற்போது, பயணிகளை படிக்கட்டில் ஏற்றிச் செல்பவர்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கும் நடைமுறை உள்ளது. அதை மாற்றி, படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கும் திட்டத்தை போலீசார் பரிசீலனை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக