டெல்லி: கர்நாடக அரசு காவிரியில் இன்று முதல் வினாடிக்கு 10,000 கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமைக்குள் காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். அதில், தமிழகத்திலும் கர்நாடகத்திலும்
பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிக்கையை திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அதுவரை இன்றிலிருந்து தினமும் தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாளாக நடந்த விசாரணையை அடுத்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
முதலில் இந்த உத்தரவை ஏற்க கர்நாடக வழக்கறிஞர் மறுத்தார். ஆனால், இந்த தண்ணீர் திறப்பு கட்டாயம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன் பிறகே தண்ணீர் திறக்க கர்நாடகம் சம்மதித்தது.
இது தவிர காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு ஏன் இதுவரை அரசிதழில் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது எப்போது வெளியிடப்படும் என்று 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
நாளை மாண்டியா பந்த்:
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நாளை பந்த் நடத்த விவசாய அமைப்புகளும் கன்னட அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
முன்னதாக இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் டி.கே.ஜெயின், மதன் பி.லோகூர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் தனது வாதத்தை தொடர்ந்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் 14 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டு உள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் அந்த பகுதிக்கு தண்ணீர் போய் சேராவிட்டால் அனைத்து சம்பா பயிரும் கருகி விடும்.
ஜனவரி மாதம் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முடிவு எடுக்கலாம் என்ற கர்நாடகத்தின் வாதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது. அதற்குள் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி விடும். கர்நாடகா 2 போகம் சாகுபடி செய்து அறுவடை முடித்து விட்டது. ஆனால், காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால், தமிழ் நாட்டில் ஒரு போகம்கூட சாகுபடி செய்யப்படவில்லை.
மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது. இதை வைத்து சம்பா பயிரை காப்பாற்ற முடியாது.
காவிரி கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம் செப்டம்பர் மாதம் வரை 37 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், விடவில்லை. அந்த பாக்கி நீரைக் கூட நாங்கள் கேட்கவில்லை. 30 டி.எம்.சி. தண்ணீர்தான் இப்போது கேட்கிறோம்.
கர்நாடகா தனது பயிரிடும் பரப்பை அதிகரித்து, அதிக அளவில் தண்ணீரை பயன்படுத்திக்கொண்டு விட்டது. ஆனால், தமிழக விவசாயிகளின் கஷ்டத்தை கர்நாடகம் எண்ணிப்பார்க்காமல் நடந்துகொள்கிறது. காவிரி நதி நீர் தீர்ப்பாயம், ஏற்கனவே ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி, 8.4 லட்சம் ஏக்கர் பரப்பிலான விவசாயத்துக்கு மட்டுமே, அணைகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த கர்நாடகாவுக்கு, தீர்ப்பாயம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், கர்நாடகா அரசு, தற்போது 11.6 லட்சம் ஏக்கர் விவசாயத்துக்கு காவிரி நீரை பயன்படுத்தியுள்ளது.
பருவமழை குறைந்ததால் கர்நாடகாவில் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகத்துக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் நான்கு அணைகளில் உள்ள காவிரி நீர் முழுவதையும், கர்நாடகம் பயன்படுத்தும்போது, தமிழகத்துக்கு அதிலிருந்து சிறிதளவு நீரைக் கூட திறந்து விட மறுப்பது நியாயமற்ற செயல்.
மேலும் கர்நாடகம் தனது அணைகளில் சட்ட விரோதமாக தண்ணீரை தேக்கி வைத்துள்ளது. அதில் இருந்து எங்களுக்குரிய தண்ணீரை திறந்துவிட மறுப்பது சட்ட விரோதம். தமிழ் நாட்டுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்து விடாவிட்டால், தமிழகத்தின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும்.
தமிழகத்தில் ஒரு போக விளைச்சல் கூட நடக்கவில்லை. ஆனால், கர்நாடகத்தில் மட்டும் அடுத்தடுத்த விளைச்சல்களுக்கு, தண்ணீரை பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்தில் அறுவடை காலமும் முடிந்துவிட்டது. அடுத்த அறுவடை காலத்துக்காக தண்ணீர் தேவை என்று சேமித்து வைத்து இருப்பதாக கர்நாடகம் கூறுவது சரியல்ல. இந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்கக்கூடாது. ஆகவே, காவிரியில் உடனடியாக 30 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார் வைத்தியநாதன்.
தமிழக அரசு வழக்கறிஞரின் வாதத்தை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனில் திவான் வாதிடுகையில், காவிரி கண்காணிப்பு குழுவின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விட்டு வருகிறோம். ஆனால் இப்போது திறந்து விடுவதற்கு கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு இல்லை.
எங்கள் விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்று தமிழக அரசு உணர்ச்சி இந்தப் பிரச்சனையை உணர்வுப்பூர்வமானதாகவும், இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் அரசு மாற்ற முயற்சிக்கிறது. இதை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது. இந்த விஷயத்தில் உணர்ச்சி வயப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. இது இரு மாநில விவசாயிகள் தொடர்பான பிரச்சனை. இதை கவனமாக கையாள வேண்டும். முறையான, நடைமுறைகளைக் கடைப்பிடித்தே முடிவு எடுக்க வேண்டும் என்றார்.
காவிரியில் தண்ணீர் திறந்து விடமுடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதமாக மறுத்து வருவதால், நேற்றும் வழக்கு விசாரணை முடியவில்லை. இதைத்தொடர்ந்து புதன்கிழமை (இன்று) மதியம் 2 மணிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக