திங்கள், டிசம்பர் 05, 2011

சீன விவகாரங்களில் இந்திய அரசு சற்றேனும் முதுகெலும்புடன் செயல்பட வேண்டும்- உமர்

மும்பை: காஷ்மீர் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. எனவே சீன விவகாரத்தில் இந்தியா சற்றேனும் முதுகெலும்புடன் செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், சீன விவகாரங்களைக் கையாளும்போது கொஞ்சமாச்சும் முதுகெலும்புடன் நாம் செயல்பட வேண்டும்

என்பது எனது அவா.

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், தலாய் லாமாவின் டெல்லி நிகழ்ச்சியை தள்ளிப் போட முடியாது என்று மத்திய அரசு உறுதியுடன் கூறியது வரவேற்புக்குரியது. சீனாவுடன் எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தலாய் லாமாவின் நிகழ்ச்சியை நிறுத்துவது என்பது கேலிக்குரியது. இதை உணர்ந்து இந்தியா செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இதைத்தான் நாம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

காஷ்மீரை ஒரு சர்ச்சைக்குரிய பகுதி என்று கூறுவதில் சீனா சற்றும் தயங்குவதாகத் தெரியவில்லை. ஆனால் நாம் ஒரே சீனா என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது. தைவான் குறித்து நாம் பேசுவதைக் கூட சீனா விரும்புவதில்லை. திபெத்தின் நிலை குறித்தும் நாம் பேசுவதை சீனா விரும்புவதில்லை.

ஒரே இந்தியா என்ற கொள்கையை சீனா கடைப்பிடிக்காதபோது நாம் மட்டும் ஏன் ஒரே சீனா என்ற கொள்கையை ஆதரிக்க வேண்டும், பின்பற்ற வேண்டும்?

அவர்கள் ஏன் அருணாச்சல் பிரதேசம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டும்?. ஜம்மு காஷ்மீர் குறித்து அவர்கள் ஏன் கேள்வி கேட்க வேண்டும்?. எனது மாநிலத்தின் பல பகுதிகளை அவர்கள் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். இதை அவர்கள் ஒத்துக் கொள்ள முன்வர வேண்டும்.

பாகிஸ்தானிடம் நாம் எப்படி செயல்படுகிறோமோ, அதே போலத்தான் சீனாவிடமும் நாம் நடந்து கொள்ள வேண்டும். அதில் பாரபட்சமே இருக்கக் கூடாது. நமது இறையாண்மை குறித்து அவர்கள் கேள்வி கேட்டால் பதிலுக்கு நாம் கேட்க வேண்டும் என்றார் உமர் அப்துல்லா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக