திங்கள், டிசம்பர் 05, 2011

பெல்லாரி சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக டெபாசிட்டை இழந்து படு கேவலமான தோல்வி

பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெல்லாரி சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்ட ரெட்டி சகோதரர்களின் தீவிர ஆதரவாளரான ஸ்ரீராமுலு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் காதிலிங்கப்பா 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டையும் பறி கொடுத்துள்ளார்.


கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டத்தை தங்களது சட்டைப் பாக்கெட்டில் போட்டு வைத்திருக்கும் ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டி மற்றும் சோமசேகர ரெட்டி ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த ஸ்ரீராமுலு. 

பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கி எதியூரப்பா பதவியிலிருந்து விலகிய பின்னர் அமைந்த புதிய கர்நாடக அமைச்சரவையில் ரெட்டி சகோதரர்களுக்கு இடம் தரப்படவில்லை. அதேபோல ஸ்ரீராமுலுவுக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஸ்ரீராமுலு பெல்லாரி சட்டசபை உறுப்பினர் பதவியிலிருந்தும், பாஜகவிலிருந்தும் விலகினார். அவர் ரெட்டிகளுடன் இணைந்து புதுக் கட்சி தொடங்குவார் என கூறப்பட்டது. ஆனால் அதை ஸ்ரீராமுலு மறுத்தார்.

இதையடுத்து பெல்லாரி தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் ஸ்ரீராமுலு சுயேச்சையாக களம் குதித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவருடன் பாஜகவினர் யாரும் சேரக் கூடாது என்று பாஜக தலைமை உத்தரவிட்டது. மேலும் பாஜக வேட்பாளராக பெல்லாரியைச் சேர்ந்த தொழிலதிபர் கதிலிங்கப்பா அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே ஸ்ரீராமுலுவிடம் தோல்வியடைந்த ராம் பிரசாத்தே நிறுத்தப்பட்டார்.

கடும் போர்க்களமாக காணப்பட்ட இந்தத் தேர்தல் ரெட்டி சகோதரர்கள், பாஜக ஆகியோருக்கு மிகவும் முக்கியமான முடிவாக மாறியது. இதில் வென்றால் ரெட்டி சகோதரர்கள் மேலும் வலுப் பெறுவார்கள், பாஜகவுக்கு பெரும் சவாலாக விளங்குவார்கள் என பாஜக அஞ்சியது. அதேசமயம்,பாஜக வெற்றி பெற்றால் ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடங்குவார்கள் என அது கணக்குப் போட்டது.

இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக சோமசேகர ரெட்டி தீவிரப் பிரசாரம் செய்தார்.இதனால் அவரை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்தது பாஜக. 

இந்த நிலையில் தேர்தல் முடிவு பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. சுயேச்சையாகப் போட்டியிட்ட ஸ்ரீராமுலு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். கதிலிங்கப்பா படு தோல்வியை அடைந்து, டெபாசிட்டையும் பறிகொடுத்து பாஜகவை கதிகலங்க வைத்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராம் பிரசாத் 2வது இடத்தைப் பெற்றார்.

ஸ்ரீராமுலு, தொடக்கத்திலிருந்தே பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்து வந்தார். இறுதியில் அவவர் 74,527 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ராம் பிரசாத் 27,737 வாக்குகள் பெற்றார்.

பெரும் அதிர்ச்சி தரும் வகையில் பாஜக வேட்பாளர் கதிலிங்கப்பா வெறும் 17,366 வாக்குகளை மட்டுமே பெற்று கட்சித் தலைமைக்கு பெரும் 'ஷாக்' கொடுத்துள்ளார்.
  
ஆளும் கட்சியான பாஜக, பெல்லாரி இடைத் தேர்தலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, டெபாசிட்டைப் பறி கொடுத்தது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தப் படுதோல்வி, பாஜக எதிர்ப்பாளர்களுக்கும், பாஜக அதிருப்தியாளர்களுக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும் பெரும் உற்சாகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது. மீண்டும் ஒரு போர்க்களத்தை கர்நாடக அரசியல் காணும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக