வியாழன், டிசம்பர் 15, 2011

முல்லை பெரியாறு, கூடங்குளம்! ஒருங்கிணையும் தமிழர்கள்!

சீமான்: தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், அம்பேத்கார் திரைப்படத்தினை வரி நீக்கி தமிழக அரசே திரையிடவேண்டும். கூடங்குளம் அணு உலை ஆபத்து இல்லை என்கிறார்கள். அணுகுண்டு வெடித்தால் ஆபத்தா, இல்லையா? கூடங்குளத்திற்கு தமிழகத்தில் ஆபத்தில்லை என்று சொல்லும் நாராயண சாமி, புதுச்சேரியில் அணு உலை கூடம் நியமிக்கத்தயாரா?
30 ஆயிரம் கோடி செலவு என்கிறார்கள். சேது திட்டம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது. அத்திட்டம் என்னவாயிற்று?

பழ.நெடுமாறன்: சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. பழ.நெடுமாறன் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

உதயகுமார்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி கடந்த 4 மாதமாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் மத்திய நிபுணர் குழு நாளை  3 வது கட்டமாக மாநில குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

இதுபற்றி போராட்ட குழு தலைவர் உதயகுமார் கூறியதாவது, எங்களது வல்லுனர் குழு 70 பக்க அறிக்கையை தயாரித்து உள்ளது. நாங்கள் ஏற்கனவே கேட்ட 49 கேள்விகளுக்கு மத்திய குழு மேம்போக்கான பதிலை தந்துள்ளது. 4 கேள்விகளுக்கு பதில் இல்லை என்று கூறினார்.
 

கேரளத்தினர் வெறி: 
இடுக்கி மாவட்டத்தில் வசித்து வந்த தமிழர்கள் 40 குடும்பத்தினர் கேரளத்தினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். இதனால்  உயிருக்கு பாதுகாப்பு தேடி தமிழக எல்லைக்கு வந்துள்ளனர். அவர்கள் போடி அருகே கோணாம்பட்டி கிராமத்தில் தங்கள் உறவின்ர்கள் சிலர் வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.

வைரமுத்து: கேரளம் ஒன்றை மறந்து விட்டது. முல்லைப் பெரியாற்று தண்ணீரில் கேரள சகோதரனுக்கும் சேர்த்துத்தான் எங்கள் தமிழன் நெல் விளைவிக்கிறான். காய்கறி பயிரிடுகிறான். உடைந்த சோவியத் யூனியன் என் நினைவில் வந்து வந்து போகிறது. மூன்றாம் உலகப்போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான்  அந்தப் போர் எங்குமே நிகழக் கூடாது. குறிப்பாக, இந்தியாவில் தொடங்கிவிடக்கூடாது.

பச்சைத்தமிழ்நாடு பாலைவனமாக சம்மதிக்க மாட்டோம். போராடுவோம்.  முல்லைப் பெரியாற்றை விடமாட்டோம். தமிழர்கள் பட்ட சிங்கள காயமே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கேரளா வேறு எங்கள் இனத்தைக் கீறுவதா? விதியே விதியே என் செய நினைத்தாய் தமிழ் சாதியை? தமிழ் இனமே ஒன்றுபடு.

கேரளா ரயில் மறிப்பு: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பு, அம்பேத்கர் மக்கள் இயக்கம் ஆகியவற்றின் தொண்டர்கள்  ஏராளமானோர் சேலம் ஜங்சன் வழியாக கேரள செல்லும் பெங்களூர்  எர்ணாகுளம் இண்டர் சிட்டி எக்ஸ்பிரசை மறிக்க முயன்று கைதாகினர். 


ஒருவகையாக பாதிப்புகளை உணர்ந்து தமிழர்கள் ஒன்று பட ஆரம்பித்துள்ளார்கள். நமது மவுனத்தால் ஒன்றரை இலட்சம்  ஈழத்து உறவுகளை இழந்தோம். முல்லை பெரியாரிலும், கூடங்குளம் அணு மின்நிலையம் விசயங்களில் மவுனம் காத்தால் தமிழகமும், தமிழர்களும் பெரும் அழிவை சந்திப்பது உறுதி.12 கோடி மக்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்பதை உணர்வோம். உறுதியுடன் போராடுவோம். 


ரௌத்திரம் பழகு 
...யாழினி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக