வியாழன், டிசம்பர் 01, 2011

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம்: கேரளா முதல்வர் உம்மன்சாண்டி

திருவனந்தபுரம், : ‘‘முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியே தீருவோம். இந்த பிரச்னையை விளக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விரைவில் கடிதம் எழுத உள்ளேன்’’ என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார். கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில்
முல்லை பெரியாறு அணை பற்றி தீவிரமாக விவாதிக்கப்பட்டது. பின்னர், உம்மன்சாண்டி அளித்த பேட்டி:
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது என்றும், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சமீபத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுக்கத்தால் முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால், இடுக்கி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். 

எனவே, புதிய அணை கட்டுவது மிகவும் அவசியமானது. அதை கட்டியே தீருவோம். அணை மிகவும் உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியதாக அறிந்தேன். அதில், எந்த உண்மையும் இல்லை. அணையின் பலவீனம் குறித்தும், புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் குறித்தும் ஜெயலலிதாவுக்கு விளக்கி கடிதம் எழுத உள்ளேன்.தமிழ்நாட்டுடன் நல்லுறவு நீடிக்கிறது. இது தொடர வேண்டும். அதே நேரம், கேரள மக்களின் பாதுகாப்பும் மிகவும் அவசியம். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால்தான், கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஜெயலலிதா எதிர்க்கிறார். அதே போலத்தான் கேரளாவில் உள்ள 30 லட்சம் மக்களுக்கு ஆபத்து என்பதால்தான் புதிய அணை கட்ட முயல்கிறோம். தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை தொடர்ந்து தருவோம் என்று கூறிய பிறகும், புதிய அணை கட்டுவதை தமிழக அரசு ஏன் எதிர்க்கிறது என்பது புரியவில்லை. 

உச்ச நீதிமன்றத்தை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், முல்லை பெரியாறு அணை விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது. ஏனென்றால், மக்களின் பாதுகாப்புதான்  அரசுக்கு முக்கியம். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து பிரதமர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து பேச நாளை டெல்லி செல்ல உள்ளேன். இவ்வாறு உம்மன்சாண்டி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக