திங்கள், டிசம்பர் 19, 2011

வீடியோ கடையிலிருந்து போயஸ் தோட்டத்துக்குள் சசிகலா புகுந்தது எப்படி?

சென்னை: இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத்திருந்த அத்தனை பேருக்கும் சசிகலாவை ஜெயலலிதா அதிரடியாக நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினரே கூட இதை நம்ப மறுக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவரும் பேணிக் காத்து வந்தனர்.

இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது.

தமிழக அரசில், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தவர் எம்.நடராஜன். இவரது மனைவிதான் சசிகலா. சாதாரணமான பெண்மணியாக, வீடியோ கடை நடத்தி வந்தவர் சசிகலா. 1982ம் ஆண்டு அப்போதைய தென் ஆற்காடு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றி வந்தார் நடராஜன். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திரலேகாவுடன் நல்ல நட்பை வைத்திருந்தார்.

அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத்தில் நடந்து வந்தது. சந்திரலேகாவிடம் தனது மனைவியை நடராஜன் அறிமுகம் செய்து வைத்தார். அவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசியை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் புகுந்தார் சசிகலா.

வீட்டில் தனியே இருந்த ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந்தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழிகளாயினர்.

அதன் பிறகு அவருக்கு உதவியாளர் போல செயல்பட்டார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின் கட்சியில் உறுப்பினரானார் சசிகலா. அதிமுகவில் பெரும் செல்வாக்கு மிக்கவராக உயர்ந்தார். அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியும் தந்தார் ஜெயலலிதா.

அவரது அக்காள் மகனான டி.டி.வி.தினகரன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கட்சியின் பொருளாளராகவும் பின்னர் அமைப்பு செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.

வீட்டுக்குள் நுழைய நடராஜனுக்கு ஜெயலலிதா தடை விதித்த போது தனது வீட்டை விட்டுவிட்டு, கணவரைப் பிரிந்து, போயஸ் தோட்டத்துக்கே வந்துவிட்டார் சசிகலா. கடந்த 29 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வீடடில் தான் வசித்து வந்தார் சசிகலா.

இந்த நீண்ட கால நட்புக்கு வித்திட்ட சந்திரேலகா பின்னர் அப்போதைய ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். முகம் கருகிப் போய் படுகாயமடைந்த சந்திரலேகா பின்னர் தனது பணியை ராஜினமா செய்தார். ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியுடன் இணைந்து அரசியலில் குதித்தார்.

சாதாரண பெண்மணியாக வலம் வந்து கொண்டிருந்த சசிகலா, போயஸ் தோட்டத்திற்குள் புகுந்த பின்னர் ஜெயலலிதாவின் ஆசியுடன் சக்தி வாய்ந்தவராக வலம் வந்தார். தனது தோழியை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் பேசி வந்தார் ஜெயலலிதாவும். சசிகலா மீது பல புகார்கள் வருகிறதே, ஏன் அவரை உங்களுடனேயே வைத்துள்ளீர்கள் என்று பலமுறை பல தரப்பிலும் கேட்கப்பட்டபோதும், சசிகலா எனது தோழி என்று அழுத்தம் திருத்தமாக கூறி அவருடன் தனது நட்பை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் ஜெயலலிதா.

ஆனால் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாக மாறி தன்னையே பதம் பார்க்க சசிகலா நினைத்ததால்தான் இன்று அவரை நீக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

ஆட்சியில் அராஜக தலையீடு:

கடந்த 2 அதிமுக ஆட்சியில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய அளவில், தற்போதைய 3வது அதிமுக ஆட்சியில் சசிகலாவின் தலையீடுகள் அராஜகமாக இருந்ததாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகளை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார் சசிகலா. நான் முதல்வரா யார் முதல்வர் என்று ஜெயலலிதாவே கொதித்தெழுந்து கேட்கும் அளவுக்கு சசிகலாவின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

தனக்குப் பணியாத பல ஐஏஎஸ் அதிகாரிகளை மிரட்டி நீண்ட விடுப்பில் போக வைத்தார் சசிகலா என்று கூறுகிறார்கள். எந்த அதிகாரியாக இருந்தாலும் தன்னைத் தாண்டி ஜெயலலிதாவிடம் போகக் கூடாது என்றும் சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போனதால்தான் கொதித்தெழுந்து அவரை தூக்கி எறிந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக