புதுடெல்லி: இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விலைகுறைப்பை அறிவித்தும் பல பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விலையை குறைக்காமல் பழைய விலைக்கே விற்று கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவில், பெட்ரோல் விலை குறைப்பு அறிவிப்பு செய்யப்பட்ட்து.
ஆனால், நேற்று மதியம் வரை பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில், பழைய விலைக்கே விற்கப்பட்டது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால், பெட்ரோல் விலை, கடந்த 3ம் தேதி, 1.82 ரூபாய் மீண்டும் உயர்த்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்தனர். விலை உயர்வைக் கண்டித்து, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகித்துள்ள கட்சிகள், போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் கடந்த 16ம் தேதி, பெட்ரோல் விலை, 2.22 ரூபாய் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில், மீண்டும் 83 பைசா குறைக்கப்பட்டது.ஆனால், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலோ நேற்று மதியம் வரை, விலையை குறைக்காமலேயே விற்றன. தானியங்கி இயந்திர மீட்டரில் பதிவு செய்யப்பட்ட விலையை, பெரும்பாலான விற்பனை நிலையங்களில் மாற்றப்படாமலேயே இருந்தன. ஒரு சிலர் மட்டுமே, விலை குறைப்பு குறித்து, விற்பனை நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு பெட்ரோல் போடப்பட்டது. நள்ளிரவில் குறைக்கப்பட்டதால், மறுநாள் காலையில் செய்திகளில் அறிவிப்பு செய்த பின்னரே விலை குறைப்பு விவரம் மக்களுக்கு தெரியவந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று மதியம் வரை, இந்த விற்பனை நிலையங்கள் மூலம், பல லட்ச ரூபாய் மக்களிடம் இருந்து சுரண்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ராயபுரம் மாதா கோவில் தெருவிலுள்ள, பெட்ரோல் நிலைய ஊழியர் கூறும்போது, இயந்திரத்தில் விலையைக் குறைக்க மறந்து விட்டோம் எனக் கூறி சமாளித்தார். இந்த மோசடி குறித்து மற்றுமொரு விற்பனை நிலைய ஊழியர் கூறும்போது, பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு தெரியாமல், ஊழியர்கள் சிலர், இந்த முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இந்த மோசடிக்கும், பெட்ரோல் விற்பனை நிலைய நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக