வியாழன், டிசம்பர் 01, 2011

கூடங்குளம் மாதிரி தான் முல்லைப் பெரியாறு அணையும்..பாதுகாப்பில்லை: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி கூடங்குளம் அணு உலையை முதல்வர் ஜெயலலிதா எதிர்க்கும்போது, எனது மாநில மக்களின் பாதுகாப்புக்காக முல்லைப் பெரி்யாறு அணைக்குப் பதிலாக புதிய அணையை கட்ட வேண்டும் என்று நான் சொல்வது தவறா என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து இன்று
அமைச்சரவையைக் கூட்டி விவாதித்த உம்மன் சாண்டி பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்பதிலும், அந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளத்தின் நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை.

தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை காரணம் காட்டி கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறும்போது, எனது மாநில மக்களின் பாதுகாப்புக்காக முல்லைப் பெரி்யாறு அணைக்குப் பதிலாக புதிய அணையை கட்ட வேண்டும் என்று நான் சொல்வது தவறா?. கேரள மக்களுக்கும் தமிழக மக்களைப் போலவே பாதுகாப்பு வேண்டாமா?.

எனது மக்களின் பாதுகாப்போடு, தமிழகத்துக்கு தண்ணீர் கிடைப்பதையும் உறுதி செய்வோம். இது தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த உறுதிமொழியையும் தரத் தயார். ஆனால், புதிய அணையைக் கட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

தமிழகம்-கேரளா அரசுகள் இடையிலான உறவை சீர்குலைக்க நாங்கள் விரும்பவில்லை. இதனால் தான் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழகத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இதுவரை சொல்லவில்லை. ஆனால், எங்களது மக்களின் பாதுகாப்பு முக்கியம்.

இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி நிலைமையை விளக்கவுள்ளேன். அவரை நேரில் சந்தித்துப் பேசவும் நான் தயார்.

அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அதன் நீரை திறந்துவிட்டு, அந்த நீரை பயன்படுத்தி முடிந்த அளவுக்கு மின்சாரம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால் கோடை காலத்தில் அங்கு போதிய நீர் இல்லாமல் போய் மின் தட்டுப்பாடு ஏற்படலாம். ஆனால், அணையின் பாதுகாப்புக்காக இதை செய்து தான் ஆக வேண்டும்.

மேலும் புதிய அணை கட்டவும், முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைக் குறைக்கவும் உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஏற்போம்.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாகவும், அதில் புதிய அணை கட்டுவது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றவும் விரைவில் அமைச்சரவையை மீண்டும் கூட்டி முடிவு செய்வோம் என்றார் உம்மன் சாண்டி.
இந் நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பாக பிரதமருடன் பேச இன்றிரவு அவர் டெல்லி செல்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக