தம்மாம்:இந்தியா பிரடெர்னிடி ஃபோரம், தம்மாம் தமிழ் பிரிவு சார்பாக மாற்று மத அன்பர்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 16, 2011 அன்று தம்மாம் நாதா கிளப்பில் வைத்து நடைபெற்றது.மௌலவி முஹம்மது இக்பால் அவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். நாகூர் மீரான் அவர்கள் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் ஆற்றி வரும் பணிகளை சுருக்கமாக கூறினார்
. சமூக பணிகளையும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய நிகழ்ச்சிகளையும் ஃபோரம் செய்து வருவதை விளக்கினார். மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஃபோரம் பணியாற்றி வருவதை சில சம்பவங்கள் மூலம் தெரிவித்தார்.சமூக ஆர்வலரும் தம்மாம் தமிழ் அரங்கத்தின் தலைவருமான பொறியாளர் அனந்த ராமநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இஸ்லாத்தின் பல அம்சங்கள் தன்னை கவர்ந்திருந்தாலும் இஸ்லாத்தில் சொல்லப்படும் ஓர் இறை கொள்கை தன்னை மிகவும் ஈர்த்ததாக தெரிவித்தார்.
இந்து மதத்திலும் ஓர் இறை கொள்கை தான் சொல்லப்பட்டிருப்பதாகவும் காலப்போக்கில் சாதாரண மக்களுக்கு கடவுளின் அந்தஸ்தை மக்கள் கொடுத்ததாகவும் தெரிவித்தார். இஸ்லாத்தின் மற்றொரு கடமையான ஜகாத்தும் தன்னை கவர்ந்ததாக உரையில் குறிப்பிட்டார். முன்னர் அனைத்து சமூக மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வந்தததையும் இன்று சில சக்திகள் அதனை சீர்குலைக்க முனைவதையும் குறிப்பிட்ட அவர் இதனை சரி செய்ய வேண்டியது அனைவரின் கடமை என்றும் கூறினார்.
‘இஸ்லாம் ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் உரையாற்றிய ரியாஸ் அஹமது அவர்கள், திருக்குர்ஆனின் தனித்தன்மைகளை சுருக்கமாக கூறினார். நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான மற்றும் மருத்துவ உண்மைகளுக்கு குர்ஆன் முரணானது கிடையாது என்று விளக்கிய அவர், குர்ஆனின் சில முன்னறிவிப்புகளையும் மேற்கோள் காட்டினார். அத்துடன் இஸ்லாத்தின் ஓர் இறை கொள்கை, தூதுத்துவம் மற்றும் மறுமை வாழ்க்கை குறித்தும் சுருக்கமாக கூறிய அவர், குர்ஆன் அனைவருக்குமான வேதம் என்றும் அதனை படிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி அமைந்தது. கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிறப்புற்று திகழும் பொறியாளர் ஜகரிய்யா அவர்கள் மாற்று மத அன்பர்களின் கேள்விகளுக்கு விளக்கமாகவும் தெளிவாகவும் பதில்களை வழங்கினார்.
குர்ஆன் மற்றும் இன்னபிற வேதங்களில் இருந்து மேற்கோள் காட்டி பதில் அளித்தது மக்களை பெரிதும் கவர்ந்தது. பெரும்பாலும் கடவுள் கொள்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. சிறந்த கேள்விகளை கேட்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களான அனந்த ராமநாதன் மற்றும் ஜக்கரிய்யா இருவருக்கும் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் சார்பாக நினைவு பரிசுகளை தம்மாம் தமிழ் மண்டல தலைவர் அஹமது மீரான் அவர்கள் வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவச புத்தங்களும் சிடிகளும் வழங்க பட்டன.
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று மத அன்பர்களுக்கான பரிசுகளை மௌலவி ஜக்கி மதனி அவர்கள் வழங்கினார்கள். நாகூர் மீரான் (அபு நாஸிஹா) அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார். சிராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் நூற்று இருபது மாற்று மத அன்பர்கள் உள்ளிட்ட முன்னூறு நபர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆறு வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதையே இது காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக